நான் பக்தி மார்க்கத்தில் இருந்தபோது இந்தக் கதை எனக்குக் கற்பிக்கப்பட்டது. இது குரங்குகளைப் பற்றிய கதை. புராணங்களிலும் இதிகாசங்களிலும் நாம் எப்போதும் குரங்குகள்தானே? கதையின் நோக்கத்தை அப்படியே திருப்பிப் போட்டு இக்கதையைச் சொல்ல போகிறேன்.

ஒரு காட்டில் குரங்குக் கூட்டம் ஒன்று வசித்து வந்தது. அந்தக் கூட்டத்தை மூத்த குரங்கு ஒன்று வழிநடத்தி வந்தது. ஒருநாள் காட்டுக்கு வந்த இளவரசன் அந்தக் குரங்குக் கூட்டத்தை அரண்மனைக்கு வந்தால் சுகமாக வசிக்கலாம் என்று அழைப்பு விடுத்தான். அப்போது மூத்த குரங்கு மற்ற குரங்குகளை எச்சரித்தது. ஆனாலும் குரங்குகள் அதைக் கேட்கவில்லை. அரண்மனை சுகத்தை எண்ணி இளவரசன் பின்னாலேயே சென்றன. வேறு வழியின்றிக் கூட்டத்தைப் பிரிய விரும்பாத மூத்த குரங்கும் அவற்றுடன் சென்றது. .

இளவரசனின் ஆதரவில் குரங்குகள் கூட்டத்துக்கு அரண்மனை வாசம் சுகமாகக் கழிந்தது. அந்த அரண்மனையிலேயே ஒரு செம்மறியாடும் வசித்து வந்தது. அதுவும் இளவரசனின் செல்லம். அந்தத் துணிச்சலில் அது அடிக்கடி சமையலறையில் புகுந்து உணவைத் திருடி தின்று வந்தது. சமையல்காரர்கள் துரத்துவதற்குள் அது ஓடிவிடும். ஒருநாள் அந்த நிகழ்ச்சியைக் கண்ட மூத்த குரங்கு உடனே குரங்குக் கூட்டத்தை அழைத்து “நாம் உடனே இந்த அரண்மனையைக் காலி செய்துவிட்டு காட்டுக்குச் செல்ல வேண்டும்” என்று கூறியது.

மற்ற குரங்குகள் அதை எதிர்த்தன. ‘’ஏன்? இங்கே என்ன குறைச்சல்?” என்று கேட்டன.

மூத்த குரங்கு சொன்னது, “இந்த இடம் இனி பாதுகாப்பில்லை. அந்தச் செம்மறியாட்டினால் நமக்குச் சிக்கல் வரப்போகிறது. அது தனது திருட்டு வேலையால் ஒருநாள் சமையல்காரரின் கொள்ளிக்கட்டையால் சூடுவாங்கப் போகிறது. அப்போது அது வழக்கம் போலக் குதிரை லாயத்துக்குள் போய் ஒளிந்து கொள்ளும். அப்போது குதிரைகளையும் காயப்படுத்தி அதற்குத் ‘தீ பய நோயை’ ஏற்படுத்திவிடும். குதிரைகளுக்கு அந்த நோய் வந்துவிட்டால் ஆயுர்வேத முறைப்படி அதற்கான மருந்தில் முதன்மையான பங்கு வகிப்பது குரங்குகளாகிய நம்முடைய கொழுப்புதான். எனவேதான் சொல்கிறேன். உடனே இங்கிருந்து புறப்படுங்கள்.”

“உங்களுக்குக் கற்பனை அதிகம். அப்படியே ஏதாவது ஏற்பட்டாலும் நாங்கள் அரசக் குடும்பத்தின் செல்லப் பிள்ளைகள். எனவே, நாங்கள் வரமுடியாது. நீங்கள் வேண்டுமானால் செல்லுங்கள்” என்றன.

“புரியாமல் பேசுகிறீர்கள். குதிரைகள் அரசின் பாதுகாப்புக்கு உரியவை. எனவே, குரங்குகளைவிட அதிகாரத்துக்குக் குதிரைகளே உயர்வு. எனது சொல்லைத் தாமதமாகவே நீங்கள் உணர்வீர்கள்” என்று சொல்லிவிட்டு காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றது மூத்த குரங்கு.

ஒருநாள் வழக்கம் போலவே செம்மறி சமையலறைக்குள் புகுந்தது. வாய்ப்புக்குக் காத்திருந்த சமையல்காரர் கொள்ளிக்கட்டையால் அடித்தார். அதன் மயிர் தீப்பற்றிக் கொண்டது. அது குதிரை லாயத்துக்குள் புக, குதிரைகளுக்கும் காயம் ஏற்பட்டது. செய்தியறிந்த அரசர் அரண்மனை வைத்தியரை அழைத்தார். வைத்தியர் சொன்னார். “மருந்து செய்ய எல்லாப் பொருட்களும் உள்ளன. குரங்குகளின் கொழுப்பைத் தவிர” என்றார்.

“அரண்மனையில் நிறையக் குரங்குகள் உள்ளன. அவற்றைக் கொன்று கொழுப்பினை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார் அரசர்.

“அவை அரண்மனையின் வளர்ப்பு விலங்குகள் ஆயிற்றே?”

“குதிரைப் படை இல்லை என்றால் நாட்டுக்கே ஆபத்து. எனவே, குதிரைகளே அவசியம், குரங்குகள் அல்ல.”

அன்றிரவே தூங்கும்போது குரங்குகள் சுற்றி வளைத்துக் கொல்லப்பட்டன. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட மூத்த குரங்கு வருந்திக் கண்ணீர் வடித்தது.

இன்று காவிகளின் நலனுக்காக நம் தமிழ் குரங்குகள் சில கோமாளிச் சேட்டைகள் நிகழ்த்தி வருகின்றன. ஆனால், ஆரியக் குதிரைகளின் நலனுக்காக அவர்கள் எந்நேரமும் பலியிடப்படலாம் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

நம் மூத்தவர் சொல் கேளீர்.