குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்தும் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்தும் (NRC), ஊடகங்கள் நமக்கு தொடர்ந்து விளக்கி வருகின்றன. அவை இரண்டுக்கும் தொடர்பு கிடையாது என்கிற அமீத்ஷாவின் கூற்றை எவரும் நம்புவதற்கு அணியமாக இல்லை. அதுபோலப் பிரதமரும் நாட்டில் தடுப்பு முகாம்கள் அமைக்கப்படவில்லை என்கிற பொய்யை துணிந்து கூறுகிறார்.

முப்பதாண்டுகள் இராணுவத்தில் நாட்டுக்காக உழைத்து விருது பெற்ற முகம்மது சனாவுல்லா என்கிற மேனாள் இராணுவ அதிகாரி ஒருவரை இந்நாட்டின் குடிமகன் அல்ல என்று கூறி அவரைத் தடுப்பு முகாமுக்கு அனுப்ப முடிகிறது என்றால் வரவிருக்கும் சட்டம் எவ்வளவு கொடுமையானது என்பதை உணரமுடிகிறது. மேனாள் இந்தியக் குடியரசு தலைவர் பக்ருதீன் அலி முகமதுவின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இல்லை என்கிற செய்தி மேலும் அதிர்ச்சியைத் தருகிறது.

ஆர்.எஸ்.எஸ் இயக்க பார்ப்பனர்களின் முதன்மை எதிரி முஸ்லீம்கள் அல்ல. ஒரு பேச்சுக்கு இந்திய ஒன்றியம் எதிர்காலத்தில் ஒரு இஸ்லாமிய அரசாக மாறுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவர்களுக்குச் சேவை செய்ய முதலில் விரைபவர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள். ஆங்கிலேய ஆட்சியின்போது அவர்களுக்கு விசுவாச வேடம் கட்டிய இவர்கள் இரண்டாம் உலகப் போரின்போது அவசர அவசரமாக ஜெர்மனிய மொழியைக் கற்க முனைப்புக் காட்டியதை நினைவுக் கூறலாம்.

இவர்களது எதிரி முஸ்லீம்கள் மட்டும் அல்ல. அது, இந்நாட்டின் பழைய சூத்திரர்களும் பஞ்சமர்களும்தான். அதாவது இன்றைய பிறசாதி இந்துக்களும், ஒடுக்கப்பட்டவர்களும்தான். அவர்களே பார்ப்பனியத்தின் இலக்கு. அந்த மீன்களைப் பிடிக்கவே தங்கள் தூண்டில் முட்களில் முஸ்லீம்களைப் புழுவாக மாட்டி வைத்துள்ளனர்.   

“நிரந்தரமான அமைதியில் எனக்கு நம்பிக்கை கிடையாது” என்று கூறி அமைதி தத்துவத்தை மறுத்த முசோலினியின் வாரிசுகள் தம் ஆட்டத்தை ஏற்கனவே தொடங்கிவிட்டனர். காஷ்மீரின் 370 பிரிவு, அயோத்தி விவகாரம் போன்ற இஸ்லாமிய விவகாரத்தோடு சமூகநீதியை மறுக்கும் நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை முதலியவை எந்த மக்களைக் குறி வைப்பவை என்பதைக் கொஞ்சம் யோசித்தால் புரிந்துக்கொள்ள முடியும். எனவே இலக்கு முஸ்லீம்களுக்குதானே என்று அலட்சியமாக இருப்பவர்களே இறுதியில் பாதிக்கப்படுவர்.

.

‘நாம் அல்லது நம் தேசியத்தை வரையறுத்தல்’ நூலில் கோல்வால்கர் எழுதுகிறார்: “அடிப்படையில் வேறுபாடுகளைக் கொண்ட இனங்களும் பண்பாடுகளும் ஒற்றுமையுள்ள ஒரே அமைப்பாக ஒருங்கிணைவது சாத்தியமாகாது என்பதை ஜெர்மனி நமக்குக் காட்டியுள்ளது. அது, இந்துஸ்தானில் இருக்கும் நமக்குக் கற்கவும் இலாபமடையவும் ஒரு நல்ல பாடம்”

அவர் கூறுவதும் ஒருவகையில் உண்மைதான். இந்திய ஒன்றியம், பல இனங்களையும் பண்பாடுகளையும் கொண்டதுதான். கோல்வால்கர் கூற்றுப்படி அது ஒற்றுமையுள்ள ஒரே அமைப்பாக அதாவது, ‘இந்துத்துவா’ அமைப்பாக ஒருங்கிணைவது முடியாத செயலாகும். அதை மக்களும் தெளிவாக உணர்ந்துள்ளனர். ‘இந்து மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் நாங்கள் ‘இந்துத்துவவாதிகள்’ இல்லை’ என்று போராட்டக் களத்தில் அரசுக்கு அவர்கள் உணர்த்தி வருகின்றனர்.

மீன்கள், இன்று தங்களுக்காக இடப்பட்ட தூண்டிலைச் சரியாக அடையாளம் கண்டுவிட்டன என்று சொல்ல வேண்டும். இப்போது அவை தூண்டில்முள்ளில் மாட்டியுள்ள புழுவினையும் சேர்த்துக் காப்பாற்றத் துடிக்கின்றன. இது தூண்டில்காரர்களுக்குப் பழைய அச்சத்தை மீண்டும் உருவாக்கியிருக்கும். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்ற தூண்டில்களின் மீது குற்றம் சாட்டுவதோடு நின்றுவிடக்கூடாது. ஒருவகையில் அந்தத் தூண்டில்கள் நமது தோட்டத்தில் இருந்து களவாடப்பட்ட மூங்கில்களே.

தவறான வழிக்காட்டுதல்களில் மயங்கி நாடெங்கும் பலர் பாசிசக் கருத்தியல்களுக்கு பலியாவது தொடர்ந்து நிகழ்கின்றது. அதாவது, நம் தோட்டத்து மூங்கில்களே தொடர்ந்து தூண்டில்களாக மாறி களவுபோகின்றன. பாசிசத்தைத் தடுக்க அதன் எதிர்க் கருத்தியல்களை வலுப்படுத்தும் பணியைத் துரிதமாகத் தொடங்குவது காலத்தின் கட்டாயமாகும்.

பார்ப்பனர்கள் அனைவரையுமே எதிரிகளாகக் கருதுவதும் அறிவுடமையாகாது. எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும் அவர்களுள் முற்போக்கு எண்ணமுள்ளவர்கள் பாசிசத்துக்கு எதிரானப் போரில் மக்களோடு களத்தில் நிற்பதும், ஆதரவளிப்பதும் பாராட்டுக்குரியது. பாசிச ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த எண்ணம் கொண்டவர்களே ஆபத்தானவர்கள். நம் கவனம் தூண்டில்களை இயக்கும் நாக்பூர் மூளைகளின் மீதுதான் பதிய வேண்டும். அங்கிருந்து தொடங்குவதுதான் சரியான சமிக்ஞை.

உதவிய நூல்கள்:

1) இந்துத்துவாவின் பாசிசக் கூட்டு, மார்சியா காசலோரி.  

2) கர்கரேயை கொன்றது யார்? இந்தியாவில் பயங்கரவாதத்தின் உண்மை முகம் எஸ்.எம்.முஷ்ரிஃப்.

3) பாசிசம் – கெவின் பாஸ்மோர்

4) மற்றும் Nirmal Rajah அவர்களின் ஒரு முகநூல் பதிவு.

ஒளிப்படம்: நன்றி இந்து நாளிதழ்