“ஒரு தேசமானது அங்கு யார் பெரும்பான்மையாக வசிக்கிறார்களோ, அவர்களை வைத்தே உருவாக்கப்படும். ஜெர்மனியில் யூதர்களின் நிலை என்ன? அவர்கள் சிறுபான்மையாக இருந்ததால் ஜெர்மனியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்” என்று முழங்கியவர் சாவர்க்கர். அவருடைய பார்வையில் நாஜிகளின் இயக்கம், ‘தேசிய இயக்கம்’ ஆகவும், யூதர்களின் இயக்கம், ‘வகுப்புவாத இயக்கம்’ ஆகவும் தெரிந்தது.

தேசியமானது சிந்தனை, மதம், மொழி மற்றும் பண்பாடு இந்த ஒற்றுமையின் அடிப்படையால் அமைந்தது என்கிற காரணத்துக்காகவே ஜெர்மானியர்களும் யூதர்களும் ஒரு தேசமாகக் கருதப்பட முடியாது என்ற கருத்தியலைத் தாம் உருவாக்கிய இந்து தேசியத்துக்கு அவர் பொருத்திப் பார்த்தார். இங்குள்ள முஸ்லீம்கள் சிறுபான்மை எனக் கருதிக்கொண்டு தங்களைத் தாங்களே வெளியேற்றிக் கொள்ள வேண்டும். அவர்களின் உரிமை பற்றிய அங்கீகாரமானது, பெரும்பான்மை மக்களின் தாராளக் குணத்தைச் சார்ந்திருக்க வேண்டும் என்றும் அவர் விதிகள் வகுத்தார்.

ஆர்.எஸ்.எஸ் இயக்க மேனாள் தலைவர் கோல்வால்கரின் முடிவு இன்னும் மோசமாக இருந்தது. “ஒரு வார்த்தையில் முஸ்லீம்கள் அந்நியர்களாக இருப்பது என்று முடிவுக்கு வரவேண்டும். அல்லது இந்து தேசத்துக்கு முழுவதுமாக அடிமைப்பட்டு நாட்டில் தங்கலாம். அவர்கள் எந்த உரிமையும் கோரக்கூடாது. எந்தச் சலுகையும் கிடையாது. எந்தவித சிறப்பு உரிமைகளும் கோரக் கூடாது. குடியுரிமை கொடுக்கக் கூடாது”

இவர்கள்தான் இந்துத்துவாவின் அசல் வசனங்களை எழுதியவர்கள். இன்றைய அமித்ஷாக்களும் மோடிகளும் இந்த வசனங்களுக்கு வெறுமனே வாயசைப்பவர்கள்தாம். இந்த வசனகர்த்தாக்கள் இந்திய ஒன்றியத்தின் பெரும்பான்மை மக்களுக்கு, சில பிம்பங்களை உருவாக்கி தருகின்றனர். அதன்படி, முஸ்லீம்கள் – தேசப்பற்று இல்லாதவர்கள், பாகிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் தீவிரவாதிகள். மாறாக இந்துத்துவா ஆட்களே. தேசப்பற்றுடையவர்கள், இந்திய தேசியவாதிகள் மற்றும் தீவிரவாதத்தை எதிர்ப்பவர்கள். இங்கு, இந்திய விடுதலைப் போராட்டத்துக்காகத் தன் சுண்டுவிரலைக்கூட அசைக்காதவர்களையும், மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர்களையும் சற்றும் நினைவில் கொள்ளக்கூடாது.

இத்தகைய முஸ்லீம் வெறுப்பு கருத்தியலை நிலைநிறுத்த அவர்கள், 700 ஆண்டுக் கால முகலாய மன்னர்களின் ஆட்சியை முன்வைத்து ஒரு கற்பிதத்தை வடிவமைத்தனர். அதாவது அந்த 700 ஆண்டுக் கால முகலாயர் ஆட்சி, ‘ஒரு கொடுங்கோன்மை ஆட்சி’ என்பதே அந்தக் கற்பிதம். ஆனால் இந்தக் கற்பிதத்துக்கு மாறாக அந்த முஸ்லீம் மன்னர்களின் ஆட்சியில்தான் பார்ப்பனர்களுடைய ஆதிக்கம் மிக வலுவாக இருந்தது என்கிறது உண்மை வரலாறு.

ஒருவேளை பார்ப்பனர்களுக்கு முஸ்லீம்களின் மீது வெறுப்பு இருந்தது உண்மையெனில், முஸ்லீம்களுடைய ஆட்சியை அவர்கள் நிலைத்து நீடிக்க அனுமதித்திருக்க மாட்டார்கள். கடைசி மௌரிய அரசன் பிருகத்ரதனை அவனுடைய பார்ப்பனத் தளபதியான புஷ்யமித்திர சுங்கன் என்ன செய்தான் என்பதையும், ஆதித்திய கரிகாலனுக்கு எதிராகப் பார்ப்பன ரவிதாசன் என்ன செய்தான் என்பதையும் வரலாறு நமக்குக் கற்பித்திருக்கிறதுதானே?

முகலாய ஆட்சியில் கொடுங்கோன்மை இருந்தது என்பதை நாம் வாதத்துக்கு ஒப்புக்கொண்டாலும்கூட அதற்கு எதிராகப் பார்ப்பனர்கள் ஏன் இந்துக்களைத் தூண்டவில்லை என்ற கேள்வி எழுகிறது. வெள்ளையர் ஆட்சியில் செய்தது போல எந்தவொரு இரகசிய எதிர்ப்புக் குழுக்களையும் ஏன் அவர்கள் உருவாக்கவில்லை? அப்படியொரு நிகழ்வு நடந்ததாக ஏன் வரலாற்றின் வரிகளில் எங்குமே காணப்படவில்லை? ஏனென்றால், அவர்கள் முகலாய ஆட்சியில் பங்கேற்று சீரும் சிறப்புடனும் வாழ்ந்து வந்தனர்.

முகலாய மன்னர்களின் ஆட்சியின் அரசு நிர்வாகம் சீராகச் செயற்பட உதவியதில் பார்ப்பனர்களின் பங்கு சிறப்பாக இருந்தது. அக்பரின் ‘நவரத்னா’ அமைச்சர் குழுவில் பார்ப்பனர்கள் பங்கேற்றிருந்தனர். திப்பு சுல்தானின் முதன்மை ஆலோசர்களாகவும் அரசாங்க நிர்வாகிகளாகவும் பார்ப்பனர்களே இருந்தனர். ஒருவேளை, ‘இம்மன்னர்கள் இந்துக்களை மதித்து ஆட்சி நடத்தியவர்கள் அதனால் நாங்கள் பங்கேற்றோம்’ என்று அவர்கள் பதிலளிக்கக்கூடும். அப்படியானால் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களால் இன்றளவும் மதவெறியர் என்று அழைக்கப்படும் ஔரங்கசீப் ஆட்சி நிர்வாகத்தில் 50% அளவுக்குப் பார்ப்பனர்கள் ஆக்கிரமித்து இருந்தது எப்படி?

முஸ்லீம் மன்னர்களின் 700 ஆண்டுக் கால ஆட்சியில் முஸ்லீம்களும் பார்ப்பனர்களும் தங்களுக்கு இடையில் சர்ச்சையில் ஈடுப்பட்டார்கள் என்று எந்தவொரு வரலாற்று ஆய்வாளர்களும் குறிப்பிடவில்லை. உண்மையில் பார்ப்பனர்களுடைய ஆதரவுடன் முஸ்லீம் மன்னர்கள் தங்கள் ஆட்சியைத் தக்கவைத்து வந்துள்ளனர். இவர்களின் ஆதரவுடன்தான் ‘மதக்கொடுங்கோலன்’ அவுரங்கசீப்பும் 50 ஆண்டுக் காலம் ஆட்சி செய்துள்ளார்.

ஆனால் இந்த உண்மைகளை முற்றிலும் மறைத்து மேனாள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் எம்.எஸ்.கோல்வால்கர் தன்னுடைய, ‘நாம் அல்லது நம் தேசியத்தை வரையறுத்தல்’ (We or Our Nationhood Defined) எனும் நூலில் இவ்வாறு எழுதியுள்ளார். “தீயவர்களான முஸ்லீம்கள் எப்போது இந்தியாவுக்குள் வந்தார்களோ, அன்றிலிருந்து இன்றுவரை ஒட்டுமொத்த இந்து சமுதாயமும் அவர்களை அழிப்பதற்குப் போர் செய்துகொண்டு இருக்கிறார்கள்”.

இன்றைய ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களுக்கு எப்போது ஓர் ‘இந்து ராஜ்ய’ கனவு உண்டு. அந்தக் கனவின் அடித்தளம், ‘பேஷ்வா’ (Peshwa) ஆட்சிதான். மகாராட்டிரா மாநிலம் புனேயில் சிவாஜியின் ஆட்சிக்கு பிறகு பார்ப்பனர்கள் சிறிது காலம் அரசாண்டனர். அந்த ஆட்சிக் காலம்தான் பேஷ்வா (Peshwa) ஆட்சி. அதை மீண்டும் இந்திய ஒன்றிய நிலப்பரப்பெங்கும் விரிவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் உள்ளார்ந்த விருப்பம்.

ஆனால் விருப்பப்படும் அளவுக்கு அந்தப் பேஷ்வா ஆட்சி அப்படியொன்றும் புனிதமான ஆட்சியல்ல. அந்த ஆட்சியில்தான் உயர்சாதியினர் எச்சில் துப்புவதற்காக ‘தலித்துகள்’ தங்கள் கழுத்தில் எச்சில் சட்டியைக் கட்டி தொங்கவிட்டுகொண்டு நடமாட வேண்டும். அப்படி நடமாடுகையில் அவர்கள் ஒரு விளக்குமாற்றைத் தங்கள் இடுப்பில் கட்டியிருக்க வேண்டும் அது நிலத்தைத் தொடும் அவர்களுடைய கால் தடங்களை நிலம் தீட்டாகாதவாறு அழித்துக்கொண்டே வரும்.

அத்தகைய புனித பேஷ்வா ஆட்சியின் கீழும் அப்போது முஸ்லீம்களின் மக்கள் தொகை முப்பது விழுக்காடாக இருந்தது. ஆனால் தலித்துக்களுக்குக் கொடுமை இழைத்த அந்த ஆட்சியில் முஸ்லீம்களுக்கு எதிராகக் கலவரம் நடந்ததாக எந்தப் பதிவும் வரலாற்றில் இல்லை. மேலும், 1857 ‘முதலாம் விடுதலை போர்’ முடிந்ததும் முகலாய மன்னர் பகதூர்ஷாவை பேரரசாக நியமித்ததில் பார்ப்பனர்களுடைய பங்கு கணிசமாக இருந்தது.

இவ்வாறு வரலாறு நெடுக கிட்டதட்ட 1893 ஆம் ஆண்டு வரைக்கும், பார்ப்பனர்கள், முஸ்லீம்களை அரசியல் ரீதியாக எதிர்த்த ஓரிரு விதிவிலக்குகளைத் தவிர, இனரீதியாக எப்போதும் எதிர்த்ததில்லை. மாறாக அவர்களுக்குத் துணைபுரிந்து அணுக்கமாக இருந்துள்ளனர். அவ்வாறு துணைபுரிந்த பார்ப்பனர்கள், 19 ஆவது நூற்றாண்டின் இறுதியில் மட்டும் முஸ்லீம்களை எதிரியாகக் கருதத் தொடங்கியது ஏன்?

இந்தக் கேள்வி மிக முதன்மையான கேள்வி. ஏனெனில், இதற்கான பதிலில்தான் அவர்களுடைய நுண் அரசியலின் முழு மர்மமும் அடங்கியுள்ளது.