வரலாற்றை உன்னிப்பாகக் கவனித்தோம் எனில் பார்ப்பனர்களுக்கு என்று ஒரு தனிக் குணம் இருப்பதை அறியலாம். எப்போதெல்லாம் அவர்களுடைய இருப்பு, கேள்விக்கு உள்ளாக்கப்பட்டதோ அப்போதெல்லாம் அவர்கள் தம் அறிவைப் பயன்படுத்திச் சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர். பௌத்தத்தால் அவர்களுடைய இருப்பு கேள்விக்கு உள்ளானபோது, பௌத்தப் பிக்குகளை நாட்டைவிட்டுத் துரத்தியது ஓர் எடுத்துக்காட்டு.

கிறிஸ்டோபர் ஹிட்சன்ஸ் தனது நூலில் விளக்குவது போல (Hitch 22: A Memoir wuulil.) தேசியவாதம் பேசிய பெரும்பான்மை தலைவர்கள் அந்த நாட்டைச் சாராதவர்களாகவே இருந்துள்ளனர். எடுத்துக்காட்டாக ஜெர்மானிய தேசியவாதம் பேசிய ஹிட்லர் ஒரு ஆஸ்த்திரிய நாட்டவர். ஒருவகையில் அதுவொரு தாழ்வுணர்ச்சியே. தான் இந்த நிலத்துக்குரிய இனத்தவர் அல்ல என்கிற தாழ்வுணர்ச்சி. அது, அவர்களுடைய உள்ளத்தில் ஓர் அச்ச உணர்வை நிரந்தரமாகத் தேக்கி வைத்திருந்தது. தன்னுடைய இருப்பு எந்த நேரத்திலும் கேள்விக்கு உள்ளாகலாம் என்கிற அச்சம் அது.

அதுபோல ஆரியர்களுக்கும் பாதுகாப்பற்ற அச்ச உணர்வு எப்போதும் உள்ளுக்குள் இருந்தது. இந்த நிலத்தின் மக்கள் விழிப்புற்றால் தம்மை மீண்டும் கைபர் – போலன் கணவாய் வழியே திருப்பி அனுப்பிவிடக்கூடும். எனவே தம் இருப்பைத் தக்கவைக்கும் போராட்டத்தில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர். அதற்கான திட்டங்களைத் தீட்டினர். அதன் ஒரு பகுதியாகப் பார்ப்பனகள் தங்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்திக் கொண்டனர். மனுதர்ம சாஸ்திரத்தைப் புனித நூலாக மிகைப்படுத்தினர். தம் அறிவுத் திறமையின்றி எவரும் ஆட்சி செய்ய இயலாது என்ற பிம்பத்தைக் கட்டியமைத்தனர். அந்தச் சூழ்ச்சி ஆங்கிலேயர் காலம் வரைக்கும் நீண்டு, அவர்களுடைய மேலாண்மையைத் தொடர்ந்து தக்க வைத்திருந்தது. அந்தச் சூழ்ச்சியை முதன்முதலில் உடைத்தார் மகாத்மா ஜோதிராவ் பூலே.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவர் பார்ப்பனியத்தின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்த தொடங்கினார். அது எவ்வாறு காலங்காலமாகத் தன்னை உயர்நிலையில் பொருத்திக் கொண்டு, பிற இந்துக்களைக் கீழ்நிலையில் நிறுத்தி வைத்தது என்பதைச் சான்றுகளுடன் மக்களுக்கு விளக்கினார். உழவர்கள், கைவினைக் கலைஞர்கள், பெண்கள் ஆகியோருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எடுத்துக் கூறினார். ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் கல்விக்கூடங்களைத் திறந்தார். மனுதர்மத்தின் சூழ்ச்சிகளுக்கு எதிரான நூல்களை எழுதினார். இதனால் சமூகத்தில் பெரும் விழிப்புணர்வு உருவானது. .

எடுத்துக்கட்டாக ஜோதிராவ் பூலேயின் சீர்திருத்த இயக்கத்தால், மகாராட்டிராவின் கோல்காப்பூர் மகாராஜா சாஹீஜி, பரோடா மகாராஜா சாயஜிராவ் கெய்க்வாட் போன்றோர் விழிப்புணர்வுக் கொண்டனர். அதிலும் கோல்காப்பூர் மகாராஜா, சாதிமதப் பாகுபாடு இன்றிச் சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய சமூகங்களுக்கு அரசுப் பணிகளில் 50% இடஒதுக்கீடு வழங்கினார்.. இது இந்திய ஒன்றியம் விடுதலைப் பெறுவதற்கு முன்பே நடந்த ஒரு சமூகநீதி நடவடிக்கையாகும்.

அதுவரை தொன்னூறு விழுக்காட்டுக்கும் மேலான அரசுப் பணிகளைக் கைப்பற்றிவந்த பார்ப்பனச் சமூகத்துக்கு அதுவொரு பேரிடியாக அமைந்திருக்கும் என்பதைச் சொல்ல தேவையில்லை. தொடர்ந்து தென்னாட்டிலும் நாராயணகுரு. பெரியார் போன்ற சீர்திருத்தவாதிகள் தோன்றி பார்ப்பனியத்துக்குப் பெருத்த அடியை வழங்கத் தொடங்கியிருந்தனர். அம்பேத்கர் குறித்துத் தனியே சொல்ல வேண்டியதில்லை. மொத்தத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மகாராட்டிராவிலும் தென் மாநிலங்களிலும் பார்ப்பனியத்துக்கு எதிரான விழிப்புணர்வுத் தோன்றி வளர்ந்தது. அது அவர்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

இத்தனை நூற்றாண்டுகளாகத் தாம் பிற சாதி மக்கள் அனைவரையும் அடிமைப்படுத்திக் கொடுமைகள் செய்தது தொடர்ந்து அம்பலமானால் அது தமக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்ந்தனர். குறிப்பாக ஆங்கிலேயர்கள் விடுதலை கொடுத்துவிட்டு நாட்டைவிட்டு சென்றுவிட்டால் இங்குத் தமது நிலை மோசமாகிவிடும் என்கின்ற அச்சம் ஏற்பட்டது. விடுதலை பெற்ற நாட்டில் கட்டாயம் நாம் பழிவாங்கப்படுவோம் என்றும் அஞ்சினர். இதிலிருந்து மீள தங்களுக்குள் அவர்கள் கலந்தாலோசிக்கத் தொடங்கினர்.

அனைத்து சாதியினருக்கும் பார்ப்பனர்களின் மீது ஏற்பட்டு வரும் வெறுப்பிலிருந்து அவர்களை முதலில் திசைதிருப்ப வேண்டும். அவர்கள் அனைவரும் மீண்டும் தம் தலைமையை உயர்வாக மதிக்க வேண்டும். அதற்கு, அவர்களுக்குள் உருவாகியுள்ள ஒற்றுமையைத் தடுக்கவேண்டும். தாங்கள் உருவாக்கித் தந்துள்ள சாதிப்பிரிவினையின் அடிப்படையில் அவர்கள் தங்களுக்குள் தொடர்ந்து மோதிக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால்தான் தங்கள் தலைமைத்துவத்தைத் தக்க வைக்க முடியும்.

சாதி இந்துக்கள் அனைவரையும் தம் தலைமைத்துவத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் எனில், அனைவருக்கும் பொதுவான ஓர் எதிரியை உருவாக்க வேண்டும். அந்த எதிரி யார்? அப்போதுதான் அந்த ஆலோசனையில் பங்கு பெற்றிருந்த மகாராட்டிராவின் சித்பவன் பார்ப்பனர்கள் தங்களின் பயங்கரமான சூழ்ச்சித் திட்டத்தை முன்வைத்தனர். முஸ்லீம்கள்தான் அந்தப் பொது எதிரி. .

அண்மை நூற்றாண்டுகளில் உள்நுழைந்த முஸ்லீம்களை அந்நியர்களாகக் கட்டமைப்பதில் உடனடி இலாபம் இருந்தது. அப்போதுதான் அதற்கு முன்பு அந்நியர்களாக உள்நுழைந்த தம்மைப் பற்றிய நினைவுகளைப் பிற இந்துக்கள் மனதிலிருந்து அகற்றலாம். தம்மைப் போல அல்லாமல், பெரும்பாலான முஸ்லீம்கள் இம்மண்ணின் மைந்தர்களாக இருந்து மதம் மாறியவர்களே என்கிற உண்மையினை அது அலட்சியப்படுத்தியது. அவர்கள் தம் திட்டத்தை உடனே செயற்படுத்திட 1893-இல் புனே நகரத்தில் முதன்முதலாக திட்டமிட்ட இந்து – முஸ்லீம் கலவரம் தொடக்கி வைக்கப்பட்டது.

இன்றுவரை அது ஓயவில்லை. பின்னர்த் தொடர்ந்து அங்குமிங்கும் தன்னிச்சையாகச் சீரற்ற முறையில் நடந்துவந்த கலகங்கள் நடத்தும் குழுக்களை ஒருங்கிணைக்கும் வகையில் 1925-இல் ராஷ்டீரிய சுயசேவக் சங் எனும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் கொடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது புனித ஆட்சி நடத்திய பேஷ்வாக்களின் ‘பாகவா’ கொடியாகும்.