இந்தியா ஒரு துணைக்கண்டம். அது, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ நிறைந்தது. இவை நாம் பாடநூல்களில் படித்த வரிகள். ஒரு கண்டத்தில் மொழி, இனம், பண்பாடு, உணவு, மதம் என்று பல வேறுபாடுகள் நிலவும். இந்தியாவும் பல வேற்றுமைகளைக் கொண்டதால் அது துணைக்கண்டம் என்று அழைக்கப்பட்டது. வேற்றுமைதான் அதன் ஒற்றுமை எனவும் போற்றப்பட்டது. அதனாலேயே இந்திய அரசியலமைப்பு, ‘செக்யூலரிசம்’ என்பதைத் தனது அடிப்படைக் கொள்கையாக வகுத்துகொண்டது. செக்யூலரிசம் என்பதை வெறுமனே, ‘மதச்சார்பற்ற’ என்ற பொருளோடு நிறுத்திக் கொள்ளாது, ‘மொழிச் சார்பற்ற’, ‘இனச்சார்பற்ற’, ‘’பண்பாடு சார்பற்ற’ எனப் பல பொருட்களில் விரித்துப் பொருள் கொள்ளலாம்.

இந்தியா என்றதும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சர். ஜான் ஸ்ட்ராச்சி என்பவர் கூறியதுதான் நினைவுக்கு வருகிறது. அவர், ”இந்தியா பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது ‘இந்தியா’ என்று ஒன்று கிடையாது என்பதுதான்” என்று கூறினார். இதற்கான விளக்கம் நமக்கு வின்ஸ்டன் சர்ச்சிலிடம் இருந்து கிடைக்கிறது. “இந்தியா என்பது நில அமைப்பைக் கூறும் ஒரு சொல். நிலநடுக்கோட்டைப் போன்றே இந்தியா ஓர் ஒருங்கிணைந்த நாடல்ல”.

நிலநடுக்கோடு என்பது ஒரு கற்பனையே. அப்படியொரு கோடு உலகின் எந்தவொரு பகுதியின் மீதும் வரையப்படவில்லை என்பதை அறிவோம். ஒருவகையில் நிலநடுக்கோடு என்பதை அப்பகுதியில் அமைந்த நாடுகளைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். ஆனால், எந்தவொரு குறிப்பிட்ட நாடும், ‘நான்தான் நிலநடுக்கோடு’ என்று அதற்கு உரிமைக் கோர முடியாது. இந்திய நிலவமைப்புக்கும் இதுபொருந்தும் என்பதால்தான் வின்ஸ்டன் சர்ச்சில் அவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த அடிப்படை உண்மையைக் கருத்தில் கொண்டே இந்திய அரசியலமைப்பும் இதனை, ‘நாடு’ என்று குறிப்பிடாது ‘இந்திய ஒன்றியம்’ என்று வரையறை செய்துள்ளது. ஒன்றியம் என்றாலே பன்மைகளின் கூட்டு என்பதை மறுக்க முடியாது. புராதன இந்தியா என்பது 56 தேசங்களாக இருந்தது. பிரிட்டிசார்தான் அதை ஒட்டுப்போட்டு இந்தியாவாக உருவாக்கினார். அதனால்தான் காந்தியும் நேருவும் இந்திய தேசியத்தை ‘புவிசார் தேசியம்’ ஆக உருவகித்தனர். அந்தப் புவிசார் தேசியம் நிலத்தை அடிப்படையாகக் கொண்டது. அந்நிலத்தில் வசிக்கும் அனைவருமே இந்திய தேசியத்துக்கு உரியவர்கள்தான் என்பதே அவர்களின் நிலைப்பாடு.  

எப்படி நிலநடுக்கோட்டைச் சார்ந்த எந்தவொரு தனிநாடும் நிலநடுக்கோட்டின் தலைமைத்துவத்துக்கு உரிமைக் கொண்டாட முடியாதோ, அதுபோலவே இந்தியப் புவிசார் தேசியத்துக்கும் எந்தவொரு தனிப்பட்ட இனமோ, மொழியோ, பண்பாடோ, மதமோ எதுவாக இருந்தாலும், ‘நான்தான் தலைமை’ என்று உரிமைக் கொண்டாடிட முடியாது. அதற்கான இடத்தை இந்திய அரசிலமைப்புச் சட்டம் வழங்காததோடு அதனை முற்றிலும் நிராகரித்தும் உள்ளது. இதனால்தான், ‘புவிசார் தேசியம்’ என்கிற இந்தக் கோட்பாடு ஒரு குறிப்பிட்ட இனக்குழுவினருக்குப் பெரும் எரிச்சலை ஊட்டுவதாக இருந்தது.

ஏனெனில், அது அவர்களின் ஆதிக்கக் கனவுகளுக்குப் பெரும் தடையாக அமைந்திருந்தது. அந்தக் கருத்தியலில் ஒரேயொரு மாற்றம் மட்டும் செய்தால் போதும். அதாவது, ‘புவிசார் தேசியம்’ என்பதை ‘பண்பாட்டு தேசியம்’ என்று மாற்றியமைத்தால் போதும். தம் கனவை நிறைவேற்றிக் கொள்ள எவ்வித தடையும் இருக்காது என்பதை அறிந்த அந்த இனக்குழு அதற்காகத் திட்டமிடத் தொடங்கியது.

இந்திய ஒன்றியம் பல உதிரிப் பண்பாடுகளைக் கொண்டது. அவை அனைத்தையும் தன் தலைமையின் கீழ் எப்படி ஒருங்கிணைப்பது என்ற சவால் அந்த இனக்குழுவுக்கு இருந்தது. எனவே ‘ஒன்றிணைக்கும் திட்டமாகப் பொதுப் பண்பாடு’ ஒன்றை உருவாக்கிட அது முனைந்தது. அதற்கான வசதியைக் காலனி ஆட்சி ஏற்கனவே செய்து முடித்திருந்தது. அவர்களால் உருவாக்கப்பட்டிருந்த ஆரிய மேலாதிக்கக் கோட்பாடும், இந்து என்ற சொல்லாட்சியும் அவர்களின் நோக்கத்து உதவியது.

ஆனால், ‘ஆரியம்’ என்ற பெயர் அவர்களின் நோக்கத்தை வெளிப்படையாகக் காட்டிக்கொடுத்துவிடும். எனவே, அதனைத் தம் உள்ளத்தில் இரகசியமாக வைத்துக் கொண்டனர். சிந்து ஆறு எனும் நிலவியலை அடிப்படையாகக் கொண்ட ‘இந்து’ என்கிற சொல், மதம் சார்ந்த சொல்லாகப் பண்பு மாற்றம் பெற்றிருந்தது. அதனால், ‘இந்து மதம்’ என்ற புதிய முகமூடி அவர்களுடைய முகத்தை மறைக்க வசதியாக இருந்தது.

இந்துமதத்தை மென்மையான முகமாகக் காட்டிய விவேகானந்தர், அரவிந்தர் போன்றோரின் செயலை ஒரு குழுவினர் ரசிக்கவில்லை. அவர்கள் இந்துப் பண்பாட்டை வீரமிக்க ஓர் ஆதிக்கப் பண்பாடாக மாற்ற முனைந்தனர். ஆதிக்கப் பண்பாடு (Dominant Culture) என்பது எப்போதுமே பிற பண்பாடுகளைத் தம் உட்குழுக்களாகக் கணக்கில் சேர்க்காது. அதேசமயம், அவற்றைத் தனித்து இயங்கவும் அனுமதிக்காது. அது, தனது அடையாளத்தையே பிறவற்றின் மீதும் சுமத்தும். அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும். எனவே, ஆதிக்கப் பண்பாட்டை உருவாக்கும் நோக்கில் ‘இந்துத்துவா’ உருவாகிறது. இந்துமதம் – இந்துத்துவா இரண்டுக்கும் இடையே உள்ள தெளிவான வேறுபாடு இதுதான்.

இந்துத்துவாவுக்குச் சகிப்புத் தன்மை என்பது அறவே கிடையாது. மொழி சார்ந்த தமிழ்ப் பண்பாடு ஆகட்டும், மதம் சார்ந்த சீக்கியப் பண்பாடாகட்டும், இனம் சார்ந்த வடகிழக்குப் பண்பாடாகட்டும் அனைத்தையும் அடக்கி ஒடுக்கவே அது முயலும். இந்துத்துவா என்கிற சொல்லையும், கருத்தியலையும் உருவாக்கியவர் சாவர்க்கர் என்பதை நாம் அறிவோம். அவருடைய நோக்கம், இந்திய ஒன்றியத்தை ‘இந்து தேசியம்’ ஆக உருவாக்குவதே ஆகும். அதற்கான கொள்கையை அய்ரோப்பாவில் இருந்து அவர் இரவல் வாங்கிகொண்டார். 

ஹிட்லர் பின்பற்றிய நாஜிசக் கொள்கை ஒரு தேசத்தை உளவியல்ரீதியாக வரையறை செய்வதாகும். முசோலினி உருவாக்கிய பாசிசக் கொள்கை ஒரு தேசத்தை வரலாற்று ரீதியாகவோ பண்பாட்டு ரீதியாகவோ வரையறை செய்வதாகும். இந்துத்துவா, தன் பார்ப்பன இன மேலாதிக்கத்தை உளவியல் ரீதியாகவும், அதனை உருவாக்கும் இந்து தேசியத்தை பண்பாட்டு ரீதியாகவும் வடிவமைத்துக் கொண்டது.    

ஆதிக்கப் பண்பாட்டுடன் மாறுபடும் மக்கள் திரளை எதிரிகளாக வரையறை செய்வதே பாசிசக் கொள்கையின் முதன்மை கூறு. பாசிசத்தின் தந்தையான முசோலினி, ‘சர்வாதிகார’ சமூக உருவாக்கத்தை விரும்பியவர். ஹிட்லரோ, இனக்கற்பனை (Racial Utopia) உலகைப் படைக்கத் துடித்தவர். இந்திய நிலத்தின் அனைத்துப் பண்பாடுகளின் மீதான சர்வாதிகாரம், ஆரிய மேலாண்மை என்கிற உடோபியன் கனவு இவை இரண்டின் கலவையாக ‘இந்துத்துவா’ உருவானது.

ஓர் ஒடுக்குமுறை கருத்தியல், தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டுமெனில் அதற்கு ஒரு தாக்குதல் இலக்கு தேவை. அதாவது நிரந்தர எதிரி தேவை. இங்கு இந்துத்துவாவின் தாக்குதல் இலக்காக முஸ்லீம்கள் தெரிவு செய்யப்பட்டனர். இதில் ஒரு வேடிக்கை முரண் என்னவெனில் கடந்த 1893 ஆம் ஆண்டு வரை பார்ப்பனர்கள், முஸ்லீம்களை இனரீதியான எதிரியாகப் பார்த்ததில்லை என்பதுதான்.