உலகின் முதல் மனிதர் என்ன சாதி? உலகின் முதல் மனிதர் என்ன மதம்? உலகின் முதல் மனிதர் என்ன இனம்? இவற்றை என்றாவது நாம் கொஞ்சம் அமைதியாக உட்கார்ந்து யோசித்திருக்கிறோமா? அப்படிச் செய்திருந்தால் எவ்வளவு அபத்தமான சிந்தனைகளுடன் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை உணர்ந்திருப்போம். தற்போது ஒவ்வொருவரின் மனதையும் பாசிச நஞ்சில் தோய்க்கும் ’தூய்மைவாதம்’ வளர்ந்து வருவது கவலையளிக்கிறது. இந்நிலையில் இவ்வகை கருத்துக்கு எதிராகப் போரிடும் ஆயுத எழுத்தாக வந்திருக்கும் நூலே டோனி ஜோசப் எழுதிய ‘ஆதி இந்தியர்கள்’.

ஹோமோ சேப்பியன்ஸ் என்னும் நவீன மனிதர்கள் தம் தாயகமான ஆப்பிரிக்காலிருந்துத் தொடங்கிய பயணத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றிச் செல்வதில் தொடங்கி நடப்பு வரலாற்றுக் காலம் வரை மரபியல் சான்றுகளின் அடிப்படையில் எளிமையாக விளக்கியுள்ளார் ஆசிரியர் (தமிழ் மொழிபெயர்ப்பும் எளிமையாகவே உள்ளது). நூலின் இறுதியில், ‘தொன்றுதொட்டு இன்றுவரை எந்தவொரு குழுவோ, இனமோ அல்லது சாதியோ ‘தூய்மையான’ ஒன்றாக இருந்ததில்லை’ என்கிற நல்ல செய்தியை நமக்கு அளிப்பதே இந்நூலின் சிறப்பு.

இந்நூலை தூய்மைவாதிகள் கட்டாயம் தவிர்க்கவே விரும்புவார்கள். எனவேதான் அவர்களிடமிருந்து நூல் குறித்து சிறு முணுமுணுப்பும் எழவில்லை. அந்த அளவுக்கு நம் முகத்தில் அறைகிறது நூலின் அறிவியல் சான்றுகள். குறிப்பாக ஆரியப்பெருமைப் பேசுபவர்களுக்கு வலுவான அறை. ஆரியர்கள் துணைக்கண்டத்துள் நுழையும் முன்னரே இங்கு வடஇந்திய மூதாதையர், தென்இந்திய மூதாதையர் என அடையாளப்படுத்தப்பட்ட இரு புராதனமான மக்கள் குழுக்கள் இருந்தனர். அப்படியானால் நவீன மனிதர்கள் துணைக்கண்டத்துக்குள் நுழைந்தது எப்போது?

தொல்லியலாளர்களின் முடிவின்படி முதல் மனிதக் குழு 1,20,000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்துள்ளனர். மக்கள்தொகை மரபியலாளர் முடிவின்படி 65,000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்துள்ளனர். இவை இரண்டுக்கும் இடையே எவ்விதமான முரண்களும் கிடையாது. மரபியலாளர்களைப் பொறுத்தவரை இன்றும் நீடித்துவரும் ஒரு வம்சாவளியை விட்டுச்சென்ற குழுவினரைக் குறிப்பிடுகிறார்கள். மாறாக  தொல்லியலாளர்களோ தொல்பொருள் சான்றுகளை விட்டுச்சென்ற முதல் நவீன மனிதக் குழுவைக் குறிப்பிடுகின்றனர். அவர்கள் இங்கு நிலையாகத் தங்கவில்லை அல்லது தம் தடங்களை விட்டுவிட்டு வேறொங்கோ சென்றுவிட்டனர் அல்லது அழிந்துவிட்டனர் எனலாம்.

சரி, வெளியிலிருந்து துணைக்கண்டத்துக்கு வந்து இந்நிலத்தை நிலையாக ஆக்கிரமித்து கோலோச்சிய தொடங்கிய காலகட்டம் எப்போது நிகழ்ந்தது? அது, ஏறத்தாழ 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது. அந்த குழுவினரின் மிச்ச சொச்சம் இன்று உள்ளதா? உள்ளது, அந்த வம்சாவளி இன்று 101 என்ற எண்ணிக்கையில் மட்டுமே எஞ்சியுள்ள சின்ன அந்தமான் தீவில் வசிக்கும் ‘ஓங்கே’ இனத்தவர்தாம்.  .

இன்னும் சற்று முன்நோக்கிச் சென்று ஆராய்ந்தால் அதாவது மைட்டோ காண்ட்ரியல் டிஎன்ஏ மரபின் தடத்தில் பின்னோக்கி நடந்தால் இந்தியப் பெண்களின் தாய்வழி மூதாதையரை அடையாளம்  காணமுடியும். அவர் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி 65,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த ஒரு பெண் ஆவார். அதுபோல Y குரோமசோம் தடத்தை பின்தொடர்ந்தால் அது அதே ஆப்பிரிக்காவிலிருந்து 70,000 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேறி இங்கு வந்தடைந்த ஒரு ஆணிடம் சென்று முடியும். இவர்கள் எவரும் லெமூரியா கண்டத்திலிருந்து புறப்பட்டு வரவில்லை.

அப்படியானால் இந்திய மக்களில் எவருமே ‘ஒரிஜினல்’ இல்லையா? இருக்கிறார்கள். இந்தியர்களாகிய நம்மை சிறப்பாக பிரதிபலிக்கிற ஒரே ஓர் இந்தியரை சுட்டிக்காட்ட வேண்டுமெனில் ஒரு பழங்குடியினப் பெண்ணைதான் சுட்டிக்காட்ட முடியும். அவரே இந்தியாவில் ஆழமாக வேரூன்றி பரவலாகக் காணப்படுகின்ற மைட்டோகாண்டிரியல் டிஎன்ஏவான M2 –வைச் சுமந்திருப்பதற்கான வாய்ப்பு அதிகம்.

இந்த மரபியல் வரலாற்றில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வந்து சேர்ந்த ஆரியர்களுக்கு எங்கே இடம் இருக்கிறது? அதையும் ஆய்வு செய்துள்ளனர். இந்தியாவிலுள்ள 140 குழுக்களை ஆராய்ந்து 2018-இல் வெளியான  The Genomic Formation of South and Central Asia அறிக்கையில் இவர்களுள் பத்து குழுக்களிடம் ஸ்டெப்பி பரம்பரைச் சற்றுத்  தூக்கலாக உள்ளது என்று தெரிவிக்கிறது. பிராமின் _திவாரி, பிராமின்_உபி இரு குழுக்களிடமும் வடஇந்தியாவில் பாரம்பரியமாக அர்ச்சர்கர்களாக இருந்துவரும் குழுக்களிடமும் ஸ்டெப்பி பரம்பரைக் கூறுகள் அதிகமிருந்தன என்கிறது அவ்வறிக்கை. 

ஆனால், இதனை ஒப்புக்கொள்வார்களா? அறிவியலுக்கும் இவர்களது அறிவுக்கும் வெகு தொலைவு ஆயிற்றே? இந்த இடப்பெயர்ச்சி கோட்பாடே ஒரு சதித் திட்டமாம். அவர்களுக்கு எதிரான சதித் திட்டத்தில் பல தலைமுறைகளாக ஈடுப்பட்டு வருகின்றனராம். அதிலும் இந்திய ஒன்றியத்தில் மட்டும் இந்தச் சதி நடக்கவில்லை. பல கண்டங்களில் பல்வேறு அறிவியல் துறைகள் இணைந்து இந்தச் சதியில் ஈடுபட்டுள்ளதாம். சாதிகளைக் கண்டறிய ‘ஆய்வுக்கூடம்’ வைத்திருப்பவர்களும் இதே போன்றதொரு பதிலையே அளிக்கக்கூடும்.

உலகிலேயே அசல் பழங்குடிகளுள் ஒருவர் எனக் கருதப்படுகிற ஆஸ்திரேலிய அபாரிஜின்களைப் போலவே நாமும் 3% – 6% வரை ‘டெனிசோவன்ஸ்’ டிஎன்ஏவைக் கொண்டிருக்கிறோம். ஹோமோ இனங்களில் ஒன்றான டெனிசோவன்ஸ் புராதன டிஎன்ஏ வரிசைப்படுத்துதலின் விளைவாக மட்டுமே அடையாளம் காணப்பட்ட ஓர் இனம். இது போகட்டும் நவீன மனித இனமான ஹோமோ சேப்பியன்ஸ் இனமானது ‘இனத்தூய்மை’க் கொண்டதா? என்றால் அதுவுமில்லை என்பதே சோகம்.  

‘இனத்தூய்மை’  கொள்கையாளர்கள் உண்மையிலேயே பாவம்தான்! மனித இனமான ஹோமோ சேப்பியன்சே ‘அசல்’ அல்லது ‘தூய்மை’யான இனம் கிடையாது என்பதை அறிந்தால் அவர்களது மனம் எப்படி நொந்துப் போகும்? ஹோமோ சேப்பியன்ஸ்களுக்கு முன்னர் இருந்த இனம் ஹோமோ நியாண்டர்தாலென்சீஸ். ஆப்பிரிக்கர் அல்லாத இன்றைய ஹோமோ சேப்பியன்ஸ் இனத்தினரின் . டிஎன்ஏ-வில் 2% நியாண்டதால் மரபினீகள் கலந்துள்ளன.

பின், முன்னோர்கள் என்று சொல்லிக் கொள்ளும் தகுதி யாருக்குதான் உண்டு? ஹோமோ சேப்பியன்ஸ் டிஎன்ஏவில் 96% சிம்பன்சிகளிடம் இருக்கிறது. வேண்டுமானால் வாட்ஸ் அப் அறிஞர்கள் இப்படி சொல்லி ஆறுதல் கொள்ளலாம். “நம் முன்னோர்களான சிம்பன்சிகளின் அறிவைப் பார்த்தீர்களா?”

மிகவும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு நூல் இது. படிப்பவர்களுக்கு மேலும் பல அதிர்ச்சிக் கலந்த உண்மைகள் காத்திருக்கின்றன.  

ஆதி இந்தியர்கள் (கட்டுரைத் தொகுப்பு), டோனி ஜோசப், தமிழில்: PSV குமாரசாமி, மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ், விலை:350, www.manjulindia.com