கவிஞர், புனைவெழுத்தாளர், கட்டுரையாளர், குழந்தை இலக்கியவாதி, மொழிப்பெயர்ப்பாளர், சூழலியலாளர், பேச்சாளர், செயற்பாட்டாளர் எனப் பன்முக இயக்கம் கொண்ட ஆளுமையாக அறியப்பட்டாலும் அடிப்படையில் எளிய ‘ஹோமோ சேபியன்’. எனவே இயற்கையின் மீதான காதல் இயல்பாக அமைந்தது. ஆறாம் அறிவு கொஞ்சம் வேலை செய்வதால் சாதியை வெறுக்கவும், மதத்தை மறுக்கவும், இறையை ஒதுக்கவும் கற்றேன். இன்று முழுமையான பொருள்முதல்வாதி.
1964 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 30ந்தேதி இன்றைய நாகை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள மாதிரிமங்கலம் எனும் சிற்றூரில் பிறந்தேன். என் பெற்றோரின் திருமணம் பெரியாரின் தலைமையில் நடந்த சீர்திருத்தத் திருமணமாகும். தொடர்ச்சியாக எனக்குப் பெயரும் பெரியாரால் சூட்டப்பட்டது. பகுத்தறிவுக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் ஆன்மீக நூல்களை ஆழ்ந்துக் கற்று இளமைக்காலத்தில் ஏறத்தாழ 15 ஆண்டுக் காலம் தீவிர ஆன்மிகவாதியாக இருந்தேன். ஓடினால்தான் ஆறு; தேங்கினால் சாக்கடை. தெளிவுப் பெற்று ஓடும் ஆறானேன். டார்வினின் கைப்பிடித்து அறிவியல் எனும் கடலில் கலந்தேன்.
தந்தைவழி தாத்தா தர்மலிங்கம் ஓர் உழவர். நான் பிறப்பதற்கு முன்னரே இறந்துவிட்டார். பாட்டி மீனாம்பாள் மேனாள் உள்ளாட்சி மன்ற உறுப்பினர். தாய்வழி பாட்டி சரஸ்வதி ஓர் இல்லத்தரசி. தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் சாவுக்குப் பறையடிக்கும் இழிவுத் தடுத்து நிறுத்தப்பட்ட முதல் ஊர் மாதிரிமங்கலம். அந்த இழிவைத் தடுத்து நிறுத்திய பெரியாரின் தொண்டரான என்.டி.சாமி என்பவர்தான் எனது தாய்வழி தாத்தா. தனது ஊருக்கு வெளியே இருந்த சேரியை ஊருக்கு நடுவே அமர்த்தியது, இரட்டைக்குவளை முறையை ஒழித்து, சரிசமமாக அமர்ந்து தேநீர் அருந்தும் உரிமையும், பொதுக்குளத்தில் சமமாகப் புழங்கும் உரிமையையும் பெற்று தந்தவர். இவரிடமிருந்தே சாதிமறுப்புக்குணத்தைக் கற்றேன்.
தாய் அறிவொளி ஓர் இல்லத்தரசி. தந்தை டி.வீரையன் சிங்கப்பூரின் தொழிற்சங்கவாதி. தனது முப்பது வயதிலேயே சிங்கப்பூர் நாட்சம்பள தொழிலாளர்கள் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக இருந்தவர். அந்நாளில் சிங்கப்பூர் கீழ்நிலை அரசு ஊழியர்களுக்கு நாள் சம்பளமே வழங்கப்பட்டது. 1961ல் இதை எதிர்த்து மிகப் பெரிய போராட்டத்தை நடத்தி சிங்கப்பூரை முடங்க வைத்தவர். இறுதியில் லீ குவான் இயூ அரசாங்கம் இறங்கிவந்து அனைவருக்கும் மாதச்சம்பளமும் இதர சலுகைகளும் வழங்கியது. என் தந்தை அமைதியானவர் ஆனால் போராட்டக் குணம் மிக்கவர். அவரிடமிருந்தே என் குணமும் உருவானது.
இராஜகோபாலபுரம் சரஸ்வதி பாடசாலையில் ஆரம்பக் கல்வியும், குத்தாலம் அரசினர் உயர்நிலைப்பள்ளியிலும், பேராவூரணி அரசினர் மேல்நிலைப் பள்ளியிலும் பள்ளிக்கல்வியையும் முடித்துக் கோயம்புத்தூரில் பொறியியல் பட்டப் படிப்பைத் தொடர்ந்தாலும் அது முழுமைப் பெறவில்லை. தந்தையின் அகால மரணம் அயல்நாடுகளில் பிழைப்பைத் தேடி புலம்பெயர வைத்தது. சிங்கப்பூரில் கழிந்த குழந்தைப் பருவம் உட்படப் பின்னர் மலேசியா, போர்னியோ, மாலத்தீவு என வாழ்நாளில் பாதிக்கு மேல் வெளிநாடுகளில் கழிந்தது.
ஒன்பதாம் வயதில் தொடங்கிய எழுத்து முயற்சி பத்தொன்பதாம் வயதில் 1983 ஜூன் மாத ‘சாவி’ இதழில் ‘மிஸ்டர் நம்பிக்கைத் துரோகம்’ என்ற முதல் சிறுகதை அச்சிலேறியபோது வெற்றியடைந்தது. பள்ளிநாட்களில் ‘ராகம்’ என்ற கையெழுத்துப் பிரதியும், போர்னியோவில் வசிக்கையில் ‘பாலம்’ என்ற ஜெராக்ஸ் இதழும் நடத்தியதுண்டு. மலேசிய இதழ்களில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதினேன். பின்னர்ப் போர்னியோ காடழிப்புப் பணியில் பங்கெடுத்ததும், மாலத்தீவில் குடும்பத்தோடு ஆழிப்பேரலையில் சிக்கி உயிர் தப்பிய நிகழ்வும் என் கவனத்தைச் சூழலியல் பக்கம் திருப்பின.
எனது குடும்பத்தில் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட மூன்றாவது தலைமுறை நான். மனைவியின் பெயர் மீனா. மனைவியின் பெற்றோரும் சாதிமறுப்புத் திருமணம் செய்தவர்களே. வெளிநாட்டிலிருந்து திரும்பி இங்கு நிரந்தரமாகத் தங்கிய 2007ஆம் ஆண்டுக்கு பிறகே முழுநேர எழுத்தாளர் ஆனேன். என் கனவையும் குறிக்கோளையும் மனைவி நன்கு அறிவார். அவருக்கு அரசுப் பணிக் கிடைத்ததும், மீண்டும் வெளிநாடு செல்லவிருந்த என்னைத் தடுத்துக் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைத் தான் சுமப்பதாகக்கூறி நான் விரும்பிய வாழ்க்கையை வாழ வழிக்காட்டினார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் உண்டு என்பர். எனக்குப் பின்னால் அல்ல; முன்னாலேயே என் மனைவிதான் உள்ளார். அவரே என் எழுத்துகளின் ‘உயிர் எழுத்து’. தற்போது நன்னிலம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். ஒரே மகள் ஓவியா எம்பிஏ டூரிசம் அண்ட் டிராவல் படிப்பை முடித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் வசிக்கிறோம். .
ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு மேல் எழுத்தாளராகவும் செயற்பாட்டாளராகவும் இருந்தாலும், கடந்த 2018 செப்டம்பர் 10 அன்று எனக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தபோதுதான் என் மீது தோழர்களும் வாசகர்களும் எவ்வளவு அன்பும் மதிப்பும் வைத்துள்ளனர் என்பதை அறிந்து நெகிழ்ந்தேன். அவர்களுக்கு என் எழுத்தைத் தவிர வேறெதையும் தந்ததில்லை. எழுத்துக்களின் மீது தமிழகம் வைத்துள்ள பெருமதிப்பை உணர்ந்த தருணம் அது. உடல்நலம் மீண்டதும் மொழிக்கு மேலும் பங்களிக்க உறுதிபூண்டேன். அதன் விளைவே இந்த இணையப் பக்கம். இதற்கு உதவியதும் அன்பு தோழர்களே. அவர்கள் அனைவருக்கும் என் அன்பு கலந்த நன்றி!
என்னுடைய நூல்கள்:
இதுவரை 14 நூல்கள் வெளியாகியுள்ளன. தமிழில், ‘மறைநீர்’ என்கிற சொல்லை உருவாக்கி அந்தக் கருத்தியல் தமிழகம் எங்கும் பரவக் காரணமான நூலான ‘கண்ணுக்குத் தெரியாமல் களவுபோகும் நீர்’ ஏறக்குறைய ஒரு இலட்சம் பிரதிகளை நெருங்கவிருக்கிறது. இந்நூலும், ‘உயிரைக் குடிக்கும் புட்டிநீர்’, ‘அலையாத்திக் காடுகளும் அனல்மின் நிலையங்களும்’ ஆகிய மூன்று நூல்களும் ஆங்கிலம், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வந்துள்ளன. ’என் பெயர் ஜிப்சி’ கவிதை நூல் ‘2012 ஆம் ஆண்டுக்கான ‘விகடன் விருது’ பெற்றது. சென்னைப் புத்தகத் திருவிழாவில் என் நூல்கள் தொடர்ச்சியாக நான்காண்டு காலமாக விற்பனையின் ‘டாப் 10’ மற்றும் ‘டாப் 5’ பட்டியலில் இடம் பெற்றன.
காடோடி நாவல் ‘மலைச்சொல்’, ‘கலகம்’, மணல்வீடு இதழின் ‘ப.சிங்காரம் நினைவு விருது’ ஆகியவை கிடைத்தன. தமிழில் எந்தவொரு நாவலுக்கும் கிட்டாத இரு பெருமைகள் காடோடிக்குக் கிடைத்தன. முதலாவது தேவகி என்ற வாசகர் நாவலை தன் குரலில் பதிவுசெய்து ஆடியோவாக இணையத்தில் வெளியிட்டார். மற்றொன்று காடோடிக்காக மட்டுமே ஏறக்குறைய ஐம்பதுக்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடந்துள்ளன.
தமிழ்நாட்டின் ஈராயிரம் ஆண்டுகால வரலாற்றைப் பேசும் நூல், ‘நீர் எழுத்து’ நூல் ஓரிரு மாதத்திலேயே முதல் பதிப்பு தீர்ந்து 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்தக் கட்டுரைத் தொகுப்புக்கான ‘விகடன் விருது’ வென்றது.
குழந்தை இலக்கியம்
தட்டான்கள் பறக்கும் மழைக்காலம்’ (2009)
பசுமைப் பள்ளி (விரைவில்)
சூழலியல் நூல்
மழைக்காடுகளின் மரணம் (2011)
திருடப்பட்ட தேசம் (2012)
அலையாத்திக் காடுகளும் அனல்மின் நிலையங்களும் (2014)
நீரியல் நூல்கள்
கண்ணுக்குத் தெரியாமல் களவுபோகும் நீர் (2013)
உயிரைக் குடிக்கும் புட்டிநீர் (2015)
நீர் எழுத்து (2019)
பொது
கார்ப்பரேட் கோடரி (2016)
பால் அரசியல் (2017)
கவிதை
என் பெயர் ஜிப்சி (2012)
நாவல்
காடோடி (2014)
மொழிப்பெயர்ப்பு
காலநிலை நீதிக்கான ஊடகப் பரப்புரை 2012–13
காலநிலை நீதிக்கான ஊடகப் பரப்புரை 2013-14
காலநிலை நீதிக்கான ஊடகப் பரப்புரை 2014-15