‘எழுத்துகளை யாரும் வாசிப்பதில்லை, எழுத்தாளுமைகளுக்கு தமிழ் சமூகத்தில் மரியாதை இல்லை’ போன்ற கூக்குரல்களுக்கு தன் இறப்பின் மூலம் நல்லதொரு பதிலைச் சொல்லிச் சென்றுள்ளார் தொ.ப. கல்விப் புலத்தில் உறங்கிக் கிடந்திருக்க வேண்டிய பண்பாட்டுப் புதையலை மக்கள் புலத்துக்கு அளித்த எழுத்தாளுமை அவர். அதனால்தான் எழுத்துக்கான உயரிய விருதுகள் எதையும் அவர் பெறாத நிலையிலும் அவரது எழுத்துகளை மக்கள் கொண்டாடித் தீர்க்கின்றனர். அருந்ததி ராயின் ‘யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்து எதற்கு?’ என்ற கூற்று இவ்விடத்தில் நினைவுக்கு வருகிறது.  

தொ.ப.வை ஒரு நாட்டரியல் ஆய்வாளாராக மட்டுமே சுருக்குவது பேராபத்து. அது பெரியாரைக் கடவுள் மறுப்பாளர் என்று ஒற்றைத்தன்மைக்குச் சுருக்கியதற்கு ஒப்பானது. நாடு, மொழி, பண்பாடு அனைத்தையும் ஒற்றை தன்மையாக்க முயலும் ஆதிக்கத்துக்கு எதிராக நம் தொன்மங்களிலுள்ள பன்மைகளை அடையாளம் காட்டியவர் அவர். தொ.பவின் செயல்பாட்டின் அருமையை அண்மைக்கால நிகழ்வு ஒன்றோடு பொருத்துவதன் மூலம் புரிந்துகொள்ள முயலலாம்.  

ஜார்கண்ட் மாநில சட்டசபையில் 2020 நவம்பர் 11-ந்தேதி பழங்குடிகளை ஒரு தனித்த மதமாக அங்கீகரிக்கக் கோரும் ‘சர்ன ஆதிவாசி தரம்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட,து. எதிர்வரும் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது அதை நடைமுறைக்கு கொண்டுவரக் கோரும் தீர்மானம் அது. ‘சர்ன’ வழிப்பாடு என்பது இயற்கை வழிபாடு. மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்து, இஸ்லாம், கிறித்தவம், சீக்கியம், புத்தம், சமணம் ஆகிய ஆறு மதங்களே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தற்போது இவற்றுள் ஒன்றிலோ, மற்றவை என்ற பிரிவின் கீழோ மட்டுமே பழங்குடிகள் தன்னை பதிவுசெய்துக் கொள்ள முடியும். அவர்கள் தாம் சார்ந்த சமயத்தைக் குறிப்பிட முடியாது என்பதால் இக்கோரிக்கை எழுந்துள்ளது.

இதுவொன்றும் புதிய கோரிக்கையல்ல. 1871 – 1951 வரை எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புகளில் தொல்குடிகளைக் குறிக்க தனிப்பிரிவு இருந்துள்ளது. சுதந்திரத்துக்கு பின்னரே அது கைவிடப்பட்டுள்ளது. பழங்குடிகளை இந்து மதத்துக்குள் செரித்துக் கொள்ளும் ஒரு ஏற்பாடாகவே இதைக் கருதமுடியும். எனவே, அவர்களது இந்தக் கோரிக்கையை இழந்த உரிமையை மீட்கும் குரலாகவே பார்க்க வேண்டும். இருக்கும் மதம் போதாது என இன்னொரு மதமாக எனத் தோன்றலாம். இந்த உலகிலுள்ள அனைவரையும் ஒரே மதமாக்கிவிட வேண்டும் என்றுதான் ஒவ்வொரு மதமும் துடிக்கின்றன. உலக மக்கள் அனைவரும் பொருள்முதல்வாதிகளாக மாறிவிடவேண்டும் என்று கடவுள் மறுப்பாளர்களுக்கும் ஆசை. இருப்பினும் நடைமுறை உண்மை அவ்வாறில்லை.

இவ்விடத்தில் பழங்குடிகளின் இறை நம்பிக்கையை ஒருபுறம் ஒதுக்கி வைத்து அவர்களது கோரிக்கையின் அடித்தளத்தை ஆராயவேண்டும். பழங்குடிகளை மிசனரிகளும் இந்துமதமும் தின்று செரித்த பின்னரும் அவர்களுள் பலர் இயற்கை வழிபாட்டாளர்களாக நீடித்திருப்பது வியப்புதான். மானிடவியல் அறிஞரான ஜி.எஸ்.குர்யே, ‘பழங்குடி மக்கள் என்று சொல்வதைவிட அவர்களை பிற்பட்ட இந்துக்கள் என்று சொல்லலாம்’ என்றுகூறி தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார். தொல்குடிகளின் நம்பிக்கைக்கும் இந்துக்களின் நம்பிக்கைக்கும் ஒற்றுமைக் காண முற்பட்டவர் அவர். ஒரு ஆய்வாளரே இந்து மனம் கொண்டிருக்கையில் அரசியல்வாதிகளிடமும் மதவாதிகளிடமும் அது செயல்படுவதில் வியப்பில்லை. 

ஜார்கண்ட் தொல்குடிகளின் வழிபாட்டு முறை இந்து முறையை ஒத்திருந்தாலும் தங்களுடைய சமயம் இந்து சமயமல்ல என்கிறார்கள் அவர்கள். இது சாதிய ஏற்றத்தாழ்வற்ற நாகரிக சமயம், இது இந்துமதத்தில் இல்லாத ஒன்று என்பது அவர்களது வாதம். இந்துமதத்திலும் இயற்கை வழிபாடு உள்ளதே என்று கேள்வி எழுப்பினால் அங்கு கடவுள்கள் ஆளுக்கொரு புனிதமரத்தைக் கொண்டுள்ளனர். ஒருவர் மரம் இன்னொருவருக்கு ஆகாது. எங்களுக்கு அப்படியல்ல. அனைத்து மரங்களும் எங்கள் வழிபாட்டுக்கு உரியவையே என்கின்றனர் அவர்கள். இத்தகைய பண்புகள் கொண்ட ஒரு வாழ்வியல் முறையை இந்து எனும் தாழிக்குள் அடைக்க வேண்டாம் என்பதே அவர்களுடைய கோரிக்கையின் அடிப்படை.  

ஆனால், இதேபோன்ற வாழ்வியல் பண்புகளைக் கொண்டிருந்த தமிழ் மக்கள் என்றோ அந்தத் தாழிக்குள் அடைக்கப்பட்டுவிட்டனர். அவர்களை அவ்வாறு அடைத்த பார்ப்பனியப் பண்பாட்டுக்கு எதிராக ஒருவகையில் தமிழ் பண்பாட்டின் ‘சர்ன ஆதிவாசி தரம்’ கோரிக்கைக்கான அடித்தளத்தைத் தொடங்கி வைத்தவராகத் தொ.ப. என்ற ஆளுமையைக் குறிப்பிடலாம். தமிழ் தொன்மங்களின் பண்பாட்டுக் கூறுகளை முன்வைத்து பெருஞ்சமயத்தின் மீது அவர் நடத்திய விசாரணையால், நாட்டார் தெய்வங்களைப் பெருந்தெய்வ வழிப்பாட்டுக்குள் கரைத்துவிட்ட இன்றும் கரைக்க முயன்றுக் கொண்டிருக்கும் கூட்டத்துக்கு அவர் எரிச்சலூட்டினார்.

இன்று ஜார்கண்ட் பழங்குடிகள் தம்மை ‘நாங்கள் தனித்துவமானவர்கள்’ என்று எப்படி அடையாளம் காண்கிறார்களோ, அப்படி தமிழர்களுக்கும் அவர்களை தம் பண்பாட்டு ஆய்வுகளின் மூலம் அடையாளம் காட்டியவர் தொ.ப. அவருடைய ஆய்வுகள் கடவுள் நம்பிக்கையை நோக்கி திருப்புகின்றன என்கிற குற்றச்சாட்டில் உண்மை இருக்கலாம். அதேசமயம் இங்கு முக்காலே முக்கால்வாசி பேர் நாத்திகர்களுமில்லை என்பதே உண்மை (அப்படி இருந்தால் எனக்கும் மகிழ்ச்சியே). நாம் அவரது எழுத்துக்களைத் தவறான திசைநோக்கித் திரும்பி மற்றொன்றில் கரைந்து விடாமல் தடுக்கும் முதல் தடுப்பணையாகவே கருதவேண்டும். பிறமாநிலங்களில் நடப்பது போலவே பக்தி உணர்வை மதவுணர்வாக மாற்றும் முயற்சிகள் தமிழக மக்களிடம் எடுபடாமல் போவதற்கு இதுபோன்ற தடுப்பணைகளும் உதவுகின்றன.

உச்சியை அடைய ஒவ்வொரு படியாகத்தான் ஏறிச்சென்றாக வேண்டும் என்பதே எதார்த்தம். கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். இந்திய ஒன்றியத்தின் எந்தவொரு மாநில மக்களும் ஒரு நாத்திகரை தம் சமூகத் தலைவராக அங்கீகரிக்கவில்லை. அந்தப் பெருமை இங்குப் பெரியாருக்கு மட்டுமே உண்டு. இன்றுள்ள சூழலில் திருநீறும் குங்குமமும் தரித்துப் பெரியாரைப் போற்றுபவர்களை ‘முடியாது போ’ என்று மறுக்க முடியுமா? அவர்களைப் பகுத்தறிவு நோக்கி திருப்ப முடியவில்லை என்றால் யாருடைய செயல்திறன் போதாமையைக்  கொண்டுள்ளது என்று யோசிக்க வேண்டும்.   

எந்தவொரு கருத்தியலும் காலத்துகேற்ற மாறுதலைக் கோருகின்றன. அவற்றை இறுக்கிப் பிடித்தால் அவை புனிதத் தன்மையை அடைந்து இறுகிவிடும். பெரியார் புனிதத்துக்கு எதிரானவர். தொ.ப சிறுதெய்வ வழிப்பாட்டைக் குறித்துப் பேசினாலும் அந்நம்பிக்கை உடையவர்களை பெரியாரியல் நோக்கியே அழைத்து வர ஆசைப்பட்டார் என்பதற்கு அவரது ஒரு நூலின் தலைப்பே சாட்சியம். ‘நான் இந்துவல்ல… நீங்கள்?’

அவரது நாட்டரியல் ஆய்வு நூல்களோடு அவரைச் சுருக்கி ‘சிறுதெய்வ ஆய்வாளர்’ என்று லேபிள் ஒட்டும் போக்கைத் தவிர்க்க வேண்டும். அவரது ‘இந்து தேசியம், இதுதான் பார்ப்பனியம், நான் இந்துவல்ல நீங்கள்…?’ ஆகிய நூல்களும் இணைந்ததுதான் முழுமையான தொ.ப. இதுவே உண்மை என்பதற்குத் தொ.பவின் மரணம் குறித்து கள்ள மவுனம் சாதித்தவர்களும், அவரது பணிகளால் எரிச்சலடைந்து அரிப்பு மருந்து தடவிக்கொள்பவர்களுமே சாட்சி. இந்தப் பக்கத்தில் நின்று ‘சேம் சைடு கோல்’ போடுபவர்களைக் காட்டிலும் அவர்களே தொ.பவை உண்மையாகப் புரிந்துகொண்டவர்கள்.

ஒளிப்படம் நன்றி: தயாளன் சண்முகா