டெல்லியின் காற்று மாசுக்கு பஞ்சாப் உழவர்கள் வைக்கோல்களை எரிப்பதே காரணம். இது இன்று நேற்றல்ல, பல்லாண்டுகளாகவே தொடரும் குற்றச்சாட்டு. முதலில் நாம் காற்று மாசு பற்றிய உண்மை நிலவரத்தைப் பார்க்கலாம்.

தலைநகரின் காற்று மாசுக்கு 60% டெல்லிக்குள் இருக்கும் ஆலைகள், சூளைகள், போக்குவரத்துகள், கட்டுமானக் கழிவுகள் உள்ளிட்ட செயல்களே காரணம் என்கிறார் கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர் சச்சிதானந் திரிபாதி. வேளாண் கழிவுகளை எரிப்பது டெல்லியின் காற்று மாசுக்குச் சராசரியாக 12% அளவே காரணமாக உள்ளது. அதுவும் ஆண்டுக்கு ஓரிரு மாதம் மட்டுமே அது நிகழ்கிறது.. அதைக் குறைக்கவே தண்டம் வசூலிக்கப்படுகிறது. சரி, அதனால் மாசு குறைந்ததா? என்பதே கேள்வி.

பஞ்சாப்பில் அறுவடைக்குப் பிறகு எஞ்சும் அடித்தாள்களுக்குப் பயன்பாட்டு மதிப்பில்லை. எனவே, அவற்றைத் தீ வைத்து எரிக்கின்றனர். அந்தப் புகை காற்று மண்டலத்தில் பரவி குறிப்பாகப் பனிக்காலத்தில் வளிமண்டலத்துள் வெளியேற முடியாமல் தலைநகருக்குள் காற்று மாசை உருவாக்குகிறது. பசுமைப் புரட்சிக்கு முன்பு யாரும் வைக்கோலைக் கொளுத்தியதில்லை என்பது நினைவிருக்கட்டும். அப்போது அவை தீவனமாகப் பயன்பட்டன. இயந்திரமயமான பஞ்சாப் வேளாண்மையில் கால்நடைகள் தொலைந்துப் போனதால் வைக்கோலும் பயனற்றுப் போனது. பசுமைப் புரட்சியைக் கண்டறிந்த அறிஞர்கள் எஞ்சும் வைக்கோல்களைக் குறித்து ஏன் எந்தத் தீர்வையும் யோசிக்கவில்லை என்பது ஒரு முதன்மையான கேள்வி.

மாறாக அடித்தாள்களை அகற்ற இயந்திரத் தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், சிறு உழவர்களால் விலையின் காரணமாக இயந்திரத்தை வாங்க முடியாது. இந்த இயந்திரம் (Rota-feeder) 70000-80000 ரூபாய் வரைக்கும் விற்றன. எனவே, அரசு அதற்கு மானியம் அறிவித்தது. ஆனால், அதைக் குறிப்பிட்ட சில நிறுவனங்களிடமிருந்து வாங்கினால் மட்டுமே மானியம் கிடைக்கும் என்று அறிவித்த நிலையில் அதன் விலை ரூபாய் ஒன்றரை லட்சத்துக்கு உயர்ந்தது. இந்த இயந்திரம் அடித்தாள்களைக் கூளமாக்கி வயல்களில் பரப்பிவிடும்.

இவ்வகை இயந்திரமும் 100% அளவுக்குப் பலனளிப்பதில்லை என்று உழவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏனெனில் கூளம் பரப்பப்பட்டு மக்க வைக்கப்பட்ட வயல்களில் பல்கலைக்கழகத்தால் உருவாக்கித் தரப்படும் உயர்ரக விளைச்சல் விதைகள் சரிவர வளர்வது கிடையாது என்கின்றனர் உழவர்கள். மேலும் வைக்கோல் சிக்கலை சமாளிக்கவே ஏக்கருக்கு 800-1200 வரை செலவாகிறது என்பதால்தான் உழவர்கள் அதைக் கொளுத்தும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அவற்றை அகற்றும் ஆள் கூலிக்காவது கட்டுப்படியாகும் மானியங்களை வழங்கினால் நிலைமை மேம்படும் என்கின்றனர் அவர்கள்.

மற்றொரு தீர்வாக வைக்கோலை பயன்படுத்தி உயிரி எரிவளி தயாரிக்கும் ஆலைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. தொடக்க நிலையில் உள்ள இவை முழுமையாக நடைமுறைக்கு வரும்போதுதான் அதன் முழுமையான சாத்தியங்கள் தெரியவரும். தவிர அந்த ஆலைகள் உருவாக்கும் புகை மாசு டெல்லியை எட்டுமா, எட்டாதா என்பது குறித்துத் தகவல் எதுவும் தெரியவில்லை. ஒருவேளை அது பஞ்சாப்பிலேயே தங்கும் என்றால் டெல்லிப் புகையைவிடப் பஞ்சாப் புகைக்கு மதிப்பு குறைச்சலா என்றும் தெரியவில்லை.

அனைத்தையும்விடச் சூழலை மாசுப்படுத்தாத ஒரு யோசனை உள்ளது. நாடு முழுவதும் கோமாதாவின் மீதுள்ள கருணையால் பெருகிவரும் கோசாலைகளுக்கு வைக்கோலைக் குவிண்டாலுக்கு 500-600 ரூபாய் விலை வைத்து வாங்கலாம் என்று யோசனை சொல்லப்படுகிறது. மாட்டிறைச்சித் தடையால் வடஇந்திய தெருக்களில் திரியும் மாடுகளின் எண்ணிக்கைப் பெருகியுள்ளது. அவற்றுக்கு வைக்கோலை கருணை உள்ளங்கள் வாங்கி உதவினால்கூடக் குவிண்டாலுக்கு 200-300 கிடைத்தால்கூடப் போதும் என்று உழவர்கள் மகிழ்ச்சியோடு ஒத்துக்கொள்வார்கள்; வைக்கோலையும் கொளுத்தமாட்டார்கள்.

அனைத்தையும்விட இப்போது உச்சக்கட்டச் செய்தி ஒன்றுக்கு வருவோம். பஞ்சாப் உழவர்கள் கடந்த பல ஆண்டுகளாகவே வைக்கோலை எரித்து வருகின்றனர். ஒரேயொரு வேறுபாடு என்னவெனில் அப்போது அவர்கள் கழிவுகளைச் செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாத தொடக்கத்தில் எரித்து வந்தனர். அந்தச் சமயத்தில் காற்று டெல்லிக்கு மேற்கிலிருந்து வீசும். எனவே பஞ்சாப் புகை டெல்லிக்கு வரவில்லை. பஞ்சாப் மட்டுமே புகைமண்டலமாகக் காட்சியளிக்கும்.

பஞ்சாப் அரசினால் கடந்த 2009 ஆம் ஆண்டு நிலத்தடிநீர் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு அவர்கள் அக்டோபர் பிற்பகுதியில் வைக்கோலை எரிக்கத் தொடங்கினர். அந்நேரத்தில் காற்று வடக்கிலிருந்து வீசும் என்பதால் புகை டெல்லியைத் தாக்கத் தொடங்கியது. அதற்குப் பஞ்சாப் உழவர்கள் நெல் பயிரிடும் காலத்தை மாற்றிக் கொண்டதே காரணம். ஆனால், அதை மாற்ற சொன்னவர்களைக் குறித்து ஒருவரும் மூச்சுவிடுவதில்லை.

பஞ்சாப்பில் முன்னர் ஏப்ரல் மாதத்தில் நெல் பயிரிடத் தொடங்குவர். இந்தச் சட்டத்துக்குப் பிறகு நெல் பயிரிடுவது ஜூன் மாதத்துக்குத் தள்ளிப்போனது. அதனாலேயே அறுவடையும் தாமதமாக அக்டோபர் இறுதியை அடுத்துக் கோதுமை பயிரிட நிலத்தைத் தயார் செய்ய வைக்கோலைக் கொளுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர். சட்டம் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கெனக் கூறப்பட்டாலும் அதைக் கொண்டுவரத் தூண்டியது. USAID மற்றும் மான்சாண்ட்டோ நிறுவனமும்தான் என்று நம்பப்படுகிறது.

மான்சாண்ட்டோ, நெல்லுக்குப் பதில் மரபீனி மாற்றம் செய்யப்பட்ட தம் மக்காச் சோளத்தைப் பயிரிடுவதற்காக இந்த ஏற்பாட்டைச் செய்வதாகக் குற்றச்சாட்டுகிறார் தொழில்நுட்ப மற்றும் பொருளியல் அறிஞர் அரவிந்த் குமார். இந்திய ஒன்றியத்தின் உபரி தானிய உற்பத்தி மான்சாண்ட்டோ போன்ற நிறுவனங்களுக்குப் பெரும் இடையூறாகும். உலகின் உணவு தானிய உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்பட்டால்தான் அதைச் சாக்காக வைத்து மரபீனி மாற்ற விதைகளைச் சந்தைக்குள் நுழைக்க முடியும் என்பது அதன் திட்டம்.

பஞ்சாப்பில் நெல் பயிரிடும் பரப்பை 45% குறைப்பதற்குத் திட்டமிடுவதாக அன்றைய பஞ்சாப் முதல்வரின் அறிவிப்புக்கும், மக்காச் சோளத்தைப் பரப்பத் தேவையான ஆய்வு நடுவம் ஒன்றை அமைக்குமாறு அவர் மான்சாண்ட்டோ நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நம்ப முடியுமா? இந்த இடத்தில்தான் டெல்லியின் காற்று மாசுக்கு உண்மையான காரணம் யார்? யாருக்குத் உண்மையில் தண்டம் விதிக்கவேண்டும்? என்கிற கேள்விகள் எழுகின்றன.

போக்குவரத்து மாசு உருவாகும் வகையில் வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களை விட்டுவிட்டு, அதை வாங்கிப் பயன்படுத்தும் மக்களுக்கு மட்டுமே தண்டம் விதிக்கும் அரசு வேறென்ன செய்யும்?