மண் பொம்மையாக மாறிய சமூகத்தின் கதை

ஒரு வரலாற்றுப் புதினம் என்றால் பொதுவாக மன்னர் அல்லது அரசை மையமாக வைத்து எழுதப்படுவதே வழக்கம். மாறாக, ஒரு தொழில்நுட்பத்தை மையமாக வைத்து தீட்டப்பட்ட வரலாற்றுப் புதினமே ‘புனைபாவை. இதன் கதைக்களமானது காடு கொன்று நாடாக்கப்பட்ட நிலப்பரப்பான ‘கொங்கு நாடு’. அங்குப் படையெடுத்த மூன்றாம் குலோத்துங்கனின் காலத்திலிருந்து தொடங்கும் கதை மாலிக்காபூர் படையெடுப்பு வரை விரிகிறது.     

தமிழகத்தின் பையம்பள்ளியில், ‘இராபர்ட் புரூஸ்’ இரும்புத் தொழில்நுட்பத்தின் சுவடுகளைக் கண்டறிந்தது ஒரு திருப்புமுனை. இந்திய ஒன்றியத்தில் இரும்பின் தொடக்கம் என்பது வடமேற்கில் இருந்து வந்த ஆரியர்கள் கொண்டு வந்தது என்று ஒரு சாராரும் அந்தத் தொழில்நுட்பத்தைத் தமது முற்றுரிமையாகக் கொண்டிருந்த ‘ஹிட்டைட்டுகள்’ என்போரின் அழிவுக்கு பின்னரே அது இங்கே கொண்டுவரப்பட்டது என்று மறுசாராரும் விவாதிப்பர். இதுவே, நெடுங்காலம் நிலவியக் கருத்தாகும். ஆனால், தமிழகத் தொல்லியல் சான்றுகள் இவற்றைத் தகர்த்தன.

வடமேற்கு இந்தியாவில் கிடைத்த இரும்புப் பொருட்களைவிட தமிழகத்தில் கிடைத்த இரும்புப் பொருட்கள் காலத்தால் முந்தையது என்பதால் வி,கே.ஜெயின் உள்ளிட்ட அறிஞர்கள் இந்திய ஒன்றியத்தில் இரும்பை முதன்முதலில் பயன்படுத்தியவர்கள் தென்னிந்தியர்களே என்றனர். அதாவது, இரும்புத் தொழில்நுட்பத்தில் தன்னுரிமையுள்ள மையமாக திகழ்ந்துள்ளது தமிழ்நாடு. அதிலும் குறிப்பாக ‘கொடுமணல்’ இரும்புத் தொழில்நுட்பம் மிகச்சிறப்புடையது. அந்தத் தனித்த தொழில்நுட்பம் எதுவெனில் ‘உருக்கு’ இரும்புத் தொழில்நுட்பமே.  .  

இந்தத் தொழில்நுட்பமே புதினத்தின் மையப் பாத்திரம். மற்ற மனிதப் பாத்திரங்கள் அனைத்தும் அதற்குரிய துணைப் பாத்திரங்களே. விடங்கச் செட்டி என்கிற ஐநூற்றுவர் குலத்தைச் சேர்ந்த வணிகரின் வழியாகக் கதை விரிகிறது. வரலாற்றுக் கதை என்றாலே, ‘புரவிகள்’ பறக்கும் மொழிக்குப் பழக்கபட்ட நமக்கு இங்குக் ‘குதிரைகள்’ ஓடும் மொழியே கிடைக்கிறது. சமூகக் கதைகளைப் போன்ற நடையில் ஒரு வரலாற்றுப் புதினத்தை வாசிப்பது எளிமையாக இருக்கிறது.

ஒரு விடங்க செட்டிக்கு இருந்த அறிவு பாண்டியர்களுக்கோ சோழர்களுக்கோ இல்லாது போனதுதான் துயரம். கொடுமணல் கம்மாளர்களால் உருவாக்கப்பட்ட உருக்கு தொழில்நுட்பம் இங்கிருந்து சோனகத்துக்கு ஏற்றுமதியாகி பின் அங்கிருந்து சிரியாவின் ‘டமாஸ்கஸ் வாளாகத் திரும்பவந்துத்  தமிழகத்தை அடிமைக் கொண்ட கதையைச் ஆவலுடன் சொல்கிறது புனைபாவை. இதன் ஊடாக விரியும் மல்லியை மையமாகக் கொண்ட இருளர் பதியின் வாழ்க்கை முறை ஓர் அழகான இயற்கை ஓவியம் போல நம்மை ஈர்க்கின்றது.  

நிலவுடைமை சமூகத்தின் வளர்ச்சியால் எவ்வாறு தொழில்நுட்பம் அறிந்த பழங்குடிகள் சாதியாக மாற்றப்பட்டனர் என்பதையும், பேரரசுகளின் நில விரிவாக்கத்தில் இருளர் பழங்குடிகள் எவ்வாறு நிலமிழந்து காட்டுக்குள் நகர்ந்தனர் என்பதையும் இப்புதினம் படிப்படியாக விவரித்துச் செல்கிறது. குதிரைகளைப் பற்றிய விரிவான செய்திகள் வியக்க வைக்கின்றன. அதேசமயம், அரியச் செய்திகளைக் கொண்டிருந்தும் அலாவுதீன் கில்ஜியைப் பற்றியப் பகுதியும், வைத்திய முறைகள் குறித்த செய்திகளும் கதைக்கு வெளியே சென்றுத் திரும்புவது போலவே தோன்றுகிறது. இரண்டாம் பகுதியின் கதையோட்டம் முதலாம் பகுதியைப் போல சரளமாக அமையாததற்கு இந்தத் தடங்கல்கள் காரணமாகலாம்.  

ஒரு சமூகம் சிந்திக்கும் திறனை இழந்து புனைபாவையாக மாறியதற்கு என்ன காரணம்? அந்நியர்களின் ஆட்சியால் தமிழகம் வீழ்ந்ததே காரணம் என்பர். இந்த உண்மைக்கும் அப்பால், அந்நியர்களிடம் அடிமைப்பட்டதற்கே தமிழர்கள் சாதியத்தை இறுகப் பற்றிய பலவீனம்தான் காரணம் என்பதை புதினம் விளக்குகிறது. இது சிந்திக்க வேண்டிய செய்தி. அந்நியர்களான சுல்தான்கள், தெலுங்கர்கள், மராத்தியர்கள், இறுதியாக ஐரோப்பியர்களிடம் அடிமைப்படுவதற்கு அடிப்படையாக விளங்கிய சாதியம் இனியும் தொடர்ந்து நிலவுமெனில் எதிர்காலத்தில் அது மதவாதிகளின் ஆதிக்கத்துக்கு இட்டுச்செல்லும் என்கிற எச்சரிக்கையையே இப்புதினம் வழங்குவதாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.   

புனைபாவை (நாவல்), இரா.முருகவேள், ஐம்பொழில் பதிப்பகம், விலை: 250, நூல் வாங்க: 94443014445