ஆப்பிரிக்க இலக்கியங்கள் என்ற வகையில் நமக்கு அறிமுகமாகியுள்ள சினுவா ஆச்சிபே, கூகி வா தியாங்கோ, சிமமாண்டா அடிச்சி போன்றவர்களைத் தொடர்ந்து உஸ்மான் செம்பேன் என்கிற மற்றொரு இலக்கியவாதியைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் லிங்கராஜா வெங்கடேஷ். ‘தொல்குடித் தழும்புகள்’ என்கிற இந்நூலை எழுதியுள்ள உஸ்மான் செம்பேன் இலக்கியவாதி மட்டுமல்ல. அவர் ஆப்பிரிக்கச் சினிமாவின் தந்தை என்றும் அறியப்படுபவர். செனகல் நாட்டைச் சேர்ந்த அவரது சினிமாக்கள் மக்களின் ‘இரவு பாடசாலை’ என்றும் அழைக்கப்படுகிறது .

12 சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பில் அனைத்துக் கதைகளுமே சிறப்பாக உள்ளன. இந்தத் தேர்வுக்காக மொழிப்பெயர்ப்பாளரைப் பாராட்டவேண்டும். ஆப்பிரிக்கப் பெண்களின் அவலநிலையே கதைகளின் அடியோட்டம் என்றால் மிகையில்லை. முஸ்தபாவின் நான்கு மனைவிகளுள் மூன்றாவது மனைவியான நூம்பே என்பவளை முன்வைத்து ஒரு மனைவியின் உளவியல் நெருக்கடியைப் பேசும் கதையாக ‘அவளது மூன்று நாட்கள்’ உள்ளது. சுழற்சி முறையில் அவளது வீட்டுக்கு மூன்று நாட்கள் வருகை தரவேண்டிய கணவன் முதலிரண்டு நாட்கள் வராமல் கடைசி நாளன்று வரும்போது சீறியெழுந்து பின் இயலாமையில் சரியும் நூம்பேவின் பெண்மைக்கு இனம், மொழி, நாடுகளின் அடையாளங்கள் கிடையாது. ஆனால், ‘பிலாலின் நான்காவது மனைவி’ கதையின் யாசின் ஒரு விரும்பப்படும் விதிவிலக்கு.

பணக்கார வீட்டுக்கு வேலைக்காரியாக வந்து தற்கொலை செய்துக்கொள்ளும் ‘வாக்களிக்கப்பட்ட பூமி’ கதையின் ஜூனா, வறுமையால் ஒரு முதியவருக்கு வாழ்க்கைப்பட்டுக் கைம்பெண்ணாக நாடு திரும்பும் ‘பிரான்சிலிருந்து கடிதங்கள்’ கதையின் நஃபி இருவரும் வெவ்வேறல்ல. இந்த இரண்டாம் கதையில் ஒரு துறைமுக நகரின் தொழிலாளர்களின் வாழ்க்கை திரைப்படக் காட்சிபோல விரிக்கப்பட்டுள்ளது. இதற்குச் செம்பேன் முன்பு துறைமுகத் தொழிலாளியாக இருந்ததும் காரணமாகலாம்.

கோரா எனும் இசைக்கருவியை வாசிக்கும் யோராவுக்கும் பெரிய வீட்டின் கின்யேவுக்கும் இடையேயான காதலை விவரிக்கும் ’குறுமணற்சந்தில் ஒரு காதல்’ மனதை மென்மையாக மீட்டுகிறதென்றால் கத்தியால் கீறும் வன்முறையாகிறது தலைப்புக் கதையான ‘தொல்குடித் தழும்புகள்’. மேற்கு ஆப்பிரிக்காவின் அடிமைச் சந்தையைப் பற்றிய கதை இது. வெறும் சிப்பி மாலைகளுக்காக அடிமைகள் விற்கப்பட்ட அக்காலத்தில் கடத்தல்காரர்களிடம் சிக்கிக்கொண்ட தன் மகளை மீட்பதற்காகச் செல்லும் தந்தை ஆமூ கடத்தல்காரர்களிடமிருந்து மகளை மீட்டு தப்பித்தும் விடுகிறார். இறுதியில் மீண்டும் சிக்காமலிருக்க அவரே சொந்த மகளின் முகம் மற்றும் உடலில் கத்தியால் கீறி காயங்களை உண்டாக்கும்போது அதிர்கிறோம். அடிமைகளின் உடலில் அடையாள முத்திரையைவிட வேறெந்த காயங்களோ தழும்புகளோ இருந்தால் அவர்களுக்குச் சந்தை மதிப்புக் கிடையாது. இதை உணரும்போது வன்முறை கருவியான கத்தி அன்பின் கருவியாக மாறும் அற்புதம் நிகழ்கிறது. . 

அலுப்புத் தட்டாத மொழிப்பெயர்ப்பில் சிலவிடங்களில், ‘அய்யோ அய்த்தான், அந்தத் துப்பில், சும்மனாச்சும், நுள்ளியெடுத்து’ என்று தென்தமிழ்நாட்டு மொழியைப் பேசுவதும்கூட அழகாகத்தான் இருக்கிறது. வழக்கமாக அல்புனைவுகளை மொழிப்பெயர்க்கும் லிங்கராஜா வெங்கடேஷ் இம்முறை புனைவு நூலொன்றை மொழிப்பெயர்த்துள்ளார். தமிழுக்கு ஒரு நல்ல மொழிப்பெயர்ப்பாளர் கிடைத்துவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

தொல்குடித் தழும்புகள் (சிறுகதைகள்), செம்பேன் உஸ்மான், தமிழில்: லிங்கராஜா வெங்கடேஷ், கலப்பை பதிப்பகம், விலை: 180, நூலை வாங்க – 9444838389