ஒன்பதாம் வகுப்பு படிக்கையில் ஒருமுறை எனது வேதியியல் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அமோனியா மூலக்கூறுகளை வரைப்படமாக வரைந்து அதுகுறித்த தகவல்களைத் தெளிவாக. விளக்கினார்.  ஆனால், ‘அமோனியா’ காரநெடி மிக்கது’ என்கிற தகவல் மட்டும் புரியவில்லை. காரநெடி எப்படி இருக்கும்? என்னைப்போலவே மற்ற மாணவர்களுக்கும் அந்த அய்யம் இருந்தது. மேசையில் ஒரு கண்ணாடி சீசாவில் அவர் அமோனியா திரவத்தைப் பார்வைக்கு வைத்திருந்தார். தண்ணீரைப் போலவே இருக்கும் அது எப்படி நெடியடிக்கும்? ஆசிரியரும் புரிந்துகொண்டு என்னை அருகில் அழைத்து பாட்டில் மூடியை திறந்து முகரச் சொன்னார். மூடியைத் திறந்ததும் புகைக் கிளம்பியதை மட்டுமே பார்த்தேன். தொடர்ந்த குப்பென்ற நெடி மூக்கைத் தாக்க கண்கள் எரிந்து நீரைக்கொட்டின. உடனே, மூடியை மூடிவிட்டேன். ஆசிரியர் மற்ற மாணவர்களிடம் கேட்டார். “வேறு யாருக்காவது சந்தேகம் இருக்கா?” யார் வாயைத் திறப்பார்கள்? பல்லாண்டுகள் கழித்து வெளிநாட்டில் இறால் பதப்படுத்தும் ஆலையொன்றுக்கு அருகில் வசிக்கையில் அதிலிருந்து ஒருமுறை ‘நச்சுவளி’ கசிவதாக பீதியுற்று மக்கள் ஓடத்தொடங்கினர். அந்த நெடியை முகர்ந்த மறுநொடியே அது அமோனியாவின் நெடி என்பது எனக்கு புரிந்துவிட்டது. அது அனுபவம் தந்த அறிவு.

ஆனால் அனுபவத்தை மேற்கத்திய கோட்பாடுகள் ஏற்பதில்லை. அதற்கு நியாயமான காரணமும் உண்டு. இயற்கை அறிவியலின் கோட்பாட்டு ரீதியானான கட்டமைப்பில் உந்துதல் பெற்று உருவானதே மேற்கத்திய கோட்பாடுகள். இயற்கை அறிவியல், தனிநபரின் அனுபவத்தை வெளிப்படையாக கணக்கில் எடுக்காது. அதைப் பொறுத்தவரை அனுபவம் என்பது மானுட எழுவாயைக் கொண்டது. அது உலகளாவியதும் அல்ல என்பதால் சிக்கலுக்கும் உரியது. அறிவியல் வெற்றி அடைய காரணம் அது உலகப் பண்பியல்புகளைக் குறித்துப் பேசுவதேயாகும். ஆகவே, அனுபவத்தை கோட்பாட்டு ரீதியாக பயனுள்ளதாக ஏற்க அது மறுக்கிறது.

ஆனால், மாற்றுக் கோணமும் உண்டு. அனுபவம் குறித்தான கோட்பாடுகள் பெரும்பாலும் அய்ரோப்பிய மையவாதமாகவே இருக்கின்றன. இந்தியா, சீனா, ஆப்பிரிக்கா போன்ற மரபுகளில் காணப்படும் கருத்தாக்க சட்டகங்களிலிருந்து அது எதையும் பெறவில்லை. அவ்வகை சிந்தனைகள் முற்றாக மறுக்கப்பட்டும் உள்ளன. ஒவ்வொரு மொழியும் அம்மொழிக்குள் மட்டுமே பொருள்படும் ஒரு தனியுலகைத் தம்முள் கொண்டுள்ளன. அறிவுலகில் ஆங்கில மொழியின் மேலாதிக்கம் நிலவுவதால் பிறமொழிகளில் திறன் பெற்றவர்களின் அறிவு கவனம் பெறுவதோ விவாதிக்கப்படுவதோ இல்லை இத்தகைய மேலாதிக்க போக்குக்கு இருவகைகளில் எதிர்வினைகள் நிகழ்த்தப்படுவதைக் காணமுடிகிறது.  

அதிலொரு வகைக்கு எடுத்துக்காட்டு கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கோ. அவர் ஆங்கில மொழி மேலாதிக்கத்தைப் பண்பாட்டு மேலாதிக்கமாகக் கருதியதால் ஆங்கிலத்தில் எழுதுவதை கைவிட்டுத் தன் தாய்மொழியான கிகியூ மொழியில் எழுதத் தொடங்கினார். இதற்கு நேர்மாறாக மராத்தியிலும் கன்னடத்திலும் எழுதிவரும் இருவர் ஒன்றுசேர்ந்து ஆங்கில மொழியில் ஒரு நூலை எழுதியுள்ளனர். நூலை ஆங்கிலத்தில் எழுதியதைப் பொறுத்தமட்டில் தாங்கள் குற்றவாளிகளே என்று ஒப்புக்கொள்ளும் இவர்களுக்கு ஆங்கில கருத்துலகை நேருக்கு நேர் சந்திக்க இதைத்தவிர வேறு வாய்ப்பில்லை எனலாம். அரசியல் அறிவியலாளரான கோபால் குருவும், தத்துவவியலாளரான சுந்தர் சருக்கையுமே அந்த இருவர்.

கோட்பாட்டு ரீதியிலான மேற்கையும், அனுபவ ரீதியிலான கிழக்கையும் எதிர்கொள்ளச் செய்வதின் மூலம், ’அனுபவத்துக்கும் கோட்பாட்டுக்கும் இடையேயான அர்த்தமுள்ள உறவை கண்டெடுப்பதற்கான முயற்சி இது’ என்பது அவர்களின் வாக்குமூலம். இம்முயற்சியில் அனுபவம் கோட்பாடு இரண்டும் உருக்குலைந்து சிக்கலான முறையில் ஒன்றையொன்று பிரதிபலிப்பதால் இதை வெளிப்படுத்தும் விதமாக ‘விரிசல் கண்ணாடி’ என்கிற படிமத்தை முன்வைக்கிறோம் என்கின்றனர் இவர்கள். அந்த விரிசல் கண்ணாடி பிரதிபலிக்கும் பிம்பங்களில் சாதியத்தை உருக்குலைய வைத்திருப்பதே இந்நூலின் சிறப்பு.

சாதியம் ஒரு குற்றவாளி என்பதில் அய்யமே கிடையாது. ஆகவேதான், அது பொதுமன்றத்தில் நிறுத்தப்பட்டு அதன்மீது தொடர்ந்து குறுக்கு விசாரணைகள் நடத்தப்படுகின்றன. இம்முறை ‘கோட்பாடு X அனுபவம்’ என்பதை முன்நிறுத்தி தம் விசாரணையை மேற்கொள்கின்றனர். கோபால் குருவும், சுந்தர் சருக்கையும். அவர்கள் கோட்பாட்டினை அனுபவத்துக்கு எதிராக நிறுத்தும்போது வழக்கமான கோட்பாட்டு ரீதியிலான மேற்கு X அனுபவ ரீதியிலான கிழக்கு என்கிற நிலையை இந்தியச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து தன் விசாரணையைத் தொடங்குகின்றனர்.

கோட்பாட்டு ரீதியிலான பார்ப்பனர்கள் X அனுபவரீதியிலான சூத்திரர்கள் என்பதே கோபால் குரு செய்த அந்த மாற்றம். இந்தியத் துணைக்கண்டத்தில் கோட்பாடுகளைச் செய்யும் உரிமை யாருக்கு இருக்கிறது? என்கிற கேள்வி முதன்மையானது. ஆங்கிலத்தில் சொல்வார்களே, Born with Silver spoon’ என்று அதுபோல இங்கு சிலர் பிறக்கும்போதே கோட்பாடு படைக்கும் தகுதியுடனேயே பிறக்கின்றனர். தூய்மையான உடலின் சிந்திக்கும் தலையே இங்குக் கோட்பாடு செய்யும் தகுதிப் படைத்ததாக வரையறுக்கப்பட்டுள்ளது.

வைதீகத்தின் கோட்பாட்டாக்கமே தன்னளவில் ஒரு அக்கிரகாரமாக விளங்குகிறது.  அதன் கோட்பாட்டுக்கு  பிறக்கும்போதே கழுத்தில் எச்சில் சட்டியைக் கொண்டு பிறக்க விதிக்கப்பட்டவர்களின் அனுபவத்தைப் புரிந்துக்கொள்ளவே முடியாது. அனுபவம் அதை அனுபவிப்பருக்கு மட்டுமே கிடைப்பது. எனவேதான் அம்பேத்கருக்கு அனுபவமே முதன்மையானதாக இருந்தது. “என் பள்ளியில் நான் தனித்து உட்கார வைக்கப்படும் வரையிலும், தீண்டாமை என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. அதுவரை மநுசாத்திரத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதும் எனக்குத் தெரியாது” என்கிறார் அம்பேத்கர். 

பார்ப்பனச் சமூகத்தின் குணாம்சமே தீண்டாமைதான் என அறிவிக்கும் சுந்தர் சருக்கை அவர்கள் மற்றவரைத் தீண்டாமல் இருப்பது தன்னையே தீண்ட முடியாத சிக்கலின் வெளிப்பாடுதான் என்று விளக்குகிறார். சாதியச் சமூகத்தில் தீண்டவியலாதவர்கள் (பார்ப்பனர்) நிலைத்து நிற்க, எவராவது தீண்டப்படாதவர்களாக இருக்கவேண்டியது அவசியம். அதாவது, பார்ப்பனர்களின் பின்துணையாக்கமே (Supplimentary) தீண்டாமை. எனவே, தீண்டாமை என்பது எழுவாய் சார்ந்தாக இருக்கிறதே தவிர பயனிலை சார்ந்ததாக இல்லை என்பது அவரது பார்வை. 

இந்தியச் சமூகத்தில் கோட்பாடுகள் மீதாகத் தொடரும் ஏமாற்றமே அனுபவம் என்ற வகைமையை மீட்க முக்கியத் தூண்டுகோலாகத் திகழ்கிறது என்பது இவர்களது வாதம். அவ்வகையில் ஜோதிராவ் பூலே, அம்பேத்கர், பெரியார் போன்ற சிந்தனையாளர்கள் தங்களது வெளி சார்ந்த அனுபவங்களின் வாயிலாகவே சாதியப் பாகுபாட்டை உணர்ந்தனர். பண்டிட் ரமாபாயும் மநுவின் கோட்பாட்டினைத் தாக்குவதற்கு அனுபவம் என்ற வகைமையையே பின்பற்றினார் என்கிறது இந்நூல்.    

அனுபவத்தின் இருப்பை கழித்துவிட்டு அறிவை உருவாக்கும் முயற்சிக்கு முதன்மை தருவதே பகுத்தறிவு என்ற நிலையில் பெரியாரோ அனுபவத்தின் வழியாக பெற்ற தெளிவை அந்தப் பகுத்தறிவையே ஆயுதமாக்கி வெற்றிக் காண்கிறார். இந்திய மரபுகளில் அனுபவவாதத்துக்கும் பகுத்தறிவுக்கும் இடையே தெளிவான வேறுபாடுகள் வளர்த்தெடுக்கப்படவில்லை என்பதும் இங்கு கவனிக்கதக்கது. 

ஆனால் தற்போது நிலைமை மாறுகிறது. அனுபவம் என்ற கருத்து கல்விப்புலக் கதையாடல்களில் குறிப்பாக இந்தியச் சூழல்களில் ஆய்வுப் பொருளாக மாறிவருகிறது. இந்நிலையில்தான் அதை மேலும் வலுவாக்கும் விதத்தில் ‘விரிசல் கண்ணாடி’ வெளிவந்துள்ளது. இனி கோட்பாடுகளை மட்டுமே முன்னிறுத்தும் சொல்லாடல்கள் கேள்விக்குள்ளாகலாம். அதனால்தான் இந்நூலுக்கான அணிந்துரையில், நியூயார்க் பல்கலைக்கழக பேராசிரியரான அர்ஜூன் அப்பாதுரை “இதுவரை எல்லா சமூக அறிவியலாளர்களும் போற்றிக்கொண்டிருந்த வறட்டு முடிவுகளை மறுபரிசீலனை செய்ய இந்நூல் அவர்களைக் கட்டாயப்படுத்தும்” என்கிறார்.

சமூக அறிவியலும் தத்துவமும் கலந்துறவாடும் ஆழமான இந்நூல் வாசிப்புச் சுவை குறையாது மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. சீனிவாச ராமானுஜம் என்ற பெயரைக் கண்டாலே நூலை வாங்க வைத்துவிடும் நிலையை மீண்டும் தக்கவைத்துள்ளார் மொழிப்பெயர்ப்பாளர். அவருக்கும், கெட்டி அட்டையுடன் நூலை சிறப்பான முறையில் பதிப்பித்துள்ள எதிர் வெளியீட்டுக்கும் பாராட்டுகள். 

விரிசல் கண்ணாடி (கட்டுரைகள்), கோபால் குரு – சுந்தர் சருக்கை, தமிழில்: சீனிவாச ராமானுஜம், எதிர் வெளியீடு, விலை: 450, நூல் வாங்க – 9942511302