இந்திய ஒன்றியத்தின் புதிய வேளாண் சட்டங்களுக்கு ஐக்கிய அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் ஆதரவு தெரிவித்திருப்பதாகச் செய்தி வந்துள்ளது. அந்நாட்டின் மாபெரும் உழவராகப் பில் கேட்ஸ் இருக்கையில் வேறு எப்படி எதிர்பார்க்க முடியும்? பன்னாட்டு நிறுவனங்களின் காட்ஃபாதரிடம் இருந்து அருளாசி கிடைத்துவிட்டது. இனி சாலைகளில் மேலும் கூடுதல் பரப்பில் முட்களைப் பயிர் செய்யலாம்.

உழவர்கள் போராட்டத்தில் இந்திரா காந்தி தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசு செய்த தவறிலிருந்து இன்றைய அரசு பாடம் கற்றுகொள்ள வேண்டும் என்று அரசியல் வல்லுநர்கள் அடிக்கடி எச்சரிப்பதைப் படித்திருக்கலாம். அந்தத் தவறைப் பற்றிய பதிவே இது.

பசுமைப் புரட்சி திட்டம் பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவின் ’அமுதசுரபி’யாக மாற்றிவிட்டதாக அன்றைய காங்கிரஸ் அரசாங்கம் பெருமிதம் கொண்டிருந்தது. ஆனால், அன்றைய பஞ்சாப் உழவர்கள் அவ்வாறு கருதவில்லை. 1971-72இல் கோதுமை சாகுபடியில் போட்ட முதலீட்டில் 27% இலாபம் கிடைத்தது; 1977-78இல் முதலீட்டில் 2% கூட இலாபம் கிடைக்கவில்லை என்று உழவர்கள் புகார் செய்தனர். ஆனால், அது கண்டுக்கொள்ளப்படவில்லை. இதனால், இந்திய ஒன்றியம் முழுவதும் உணவளிப்பதற்காக நடுவண் அரசு தன் மாநிலத்தைக் காலனியாக்கிவிட்டதாகப் பஞ்சாப் உழவர்கள் கருதினர்.

இருபது ஆண்டுகாலக் கடன் சுமை அதிகரிப்பு, இலாபக் குறைவு உள்ளிட்டச் சிக்கல்களால் 1984 ஏப்ரலில் ‘கர்ச்சா ரோகோ’ போராட்டம் வெடித்தது. மே மாதம் போராட்டம் உச்சக் கட்டத்தை அடைந்தது. 1984 மே 23 அன்று அகாலிதளத் தலைவர் லோங்கோவால் ‘இந்திய உணவுக் கழகத்திற்குத் தானியங்கள் விற்பதை நிறுத்தப் போவதாக அறிவித்தார். இது பஞ்சாப் மாநிலத்தின் பேரம் பேசும் ஆற்றலை அதிகரித்துவிடும் என்று அஞ்சிய காங்கிரஸ் அரசு உடனடி நடவடிக்க எடுக்கத் திட்டமிட்டது. கிராமப்புற சீக்கியர்களின் முகமாக உருவாகி இறுதியில் தீவிரவாதியாக உருமாறியிருந்த பிந்தரன்வாலே அதற்கான வாய்ப்பை அளித்தார். ஜூன் 5 பொற்கோவில் தாக்கப்பட்டது. அந்த ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு சீக்கியர்கள் என்பவர்கள் உழவர் சமூகம் என்பது மறக்கடிக்கப்பட்டு மதச் சமூகமாகப் பார்க்கப்பட்டனர்.

உண்மையில், வேளாண்மை அடிப்படையில் உருவான பொருளாதாரச் சிக்கல்தான் அங்கு அரசியல் சிக்கலாக உருமாறியது. பஞ்சாப்பின் கெடுவாய்ப்பு, அதன் உழவர்கள் சீக்கியர்களாக இருந்ததால் அது மதச் சிக்கலாக மாற்றப்பட்டது. அங்கிருந்த மாநிலக் கட்சியும் சீக்கியர்களின் அகாலிதளக் கட்சியாக இருந்தது அதற்கு வாய்ப்பாகிவிட்டது. உழவர் போராட்டம் சீக்கியர்களின் போராட்டமாக மாற்றப்பட்டதன் பின்விளைவுகளை நாம் அறிவோம். .

தற்போதைய நடுவண் அரசும் அதை மீண்டும் மதச் சிக்கலாக மாற்ற முயற்சிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. உச்சரிக்கப்படும் ‘காலிஸ்தான்’ போன்ற சொற்கள் அதை உறுதி செய்கின்றன. ஆனால், பஞ்சாப் உழவர்கள் கடந்த காலம் கற்றுதந்த பாடத்தால் எச்சரிக்கையாக உள்ளனர். அவர்களிடையே கூட்டுத் தலைமைதான் நிலவுகிறது. அங்குப் பிந்தரன்வாலே, லோங்கோவால் போன்ற தனிப்பட்ட தலைவரோ, தீவிரவாதக் குரலோ இல்லை. மதத்தையும் அவர்கள் முன் நிறுத்தவில்லை. இதுவே நடுவண் அரசுக்கு பெரும் சிக்கலாக உள்ளது.

இதுதவிர இன்னொரு தலைவலியும் தற்போது சேர்ந்துள்ளது. உத்தரப்பிரதேச உழவர்கள் திகாயத் தலைமையில் ஒன்றுபட்டிருப்பது. அவர்கள் பெரும்பான்மையோர் ‘ஜாட்’ இனத்தவர்கள். பஞ்சாப் உழவர்களில் பெரும்பாலோரும் ஜாட் சீக்கியர்களே. இம்முறை உழவர்கள் போராட்டத்தில் ‘ஜாட்’ என்கிற சாதியின் ஒன்றிணைவே நடுவண் அரசால் உடனடியாக ஒடுக்க முடியாமைக்குக் காரணம் என்கின்றனர். ஏனெனில், சாதிவெறியைத் தூண்டி தன்னை வளர்த்துக்கொண்ட ஒரு மதவாதக் கட்சியின் அரசுக்கு மற்றவர்களைவிடச் சாதியின் வலிமையைப் பற்றி நன்கு தெரியும்.

வேளாண்மையைப் பற்றியோ உழவர்களின் முந்தைய போராட்ட வரலாறு பற்றியோ ஏதுமறியாமல் நமது பிரபலங்கள் இறையாண்மையைப் பற்றிப் பாடம் எடுக்கத் தொடங்கியுள்ளனர். ஒரு நாட்டின் இறையாண்மை என்பதே அதன் உணவு இறையாண்மையையும் உள்ளடக்கியதே என்கிற பாடத்தை முதலில் படியுங்கள்.  

நன்றி ஒளிப்படம்: இணையம்.